» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா புகார்: இந்தியா கண்டனம்

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 11:54:24 AM (IST)

சீக்கியத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா மீது ஜஸ்டின் ட்ரூடோ புகார் தெரிவித்துள்ளதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.

இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார்.

இதை பற்றி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பேசி இருக்கிறோம். இந்திய பிரதமரிடம் பேசி இருக்கிறோம். விரைவில் இந்த கொலையின் பின்புலத்தை வெளியே கொண்டு வருவோம். இந்தியா இது தொடர்பான விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும். இதில் உண்மையை கொண்டு வர வேண்டும். நாங்கள் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதனால் இந்தியா கனடா இடையிலான உறவு முறியும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

கனடா பிரதமரின் அறிக்கையையும், அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம், அதை கடுமையாக நிராகரிக்கிறோம். கனடாவில் எந்த வன்முறைச் செயலிலும் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் அபத்தமானது மற்றும் தவறானது... நாங்கள் ஒரு ஜனநாயகவாதிகள். இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது, என்று இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், கலிஸ்தானி பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து கவனத்தை மாற்ற முயல்கின்றன. காலிஸ்தானி தீவிரவாதிகள்தான் இப்போது பெரிய பிரச்சனையே. அவர்களுக்கு கனடாவில் அடைக்கலம் அளித்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். அதை பற்றியே இப்போது பேச வேண்டும். இந்த விஷயத்தில் கனடா அரசின் செயலற்ற தன்மை கவலையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது.

யார் இவர்?: இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். காலிஸ்தான் விடுதலைக்காக போராடிய இவர் இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான KTF எனப்படும் காலிஸ்தான் புலிகள் படைக்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பதில் நிஜ்ஜார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்தியாவில் இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளாக, நிஜ்ஜாரின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து இந்தியா தனது கவலைகளை பலமுறை கனடாவிடம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டில், முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், ஜஸ்டின் ட்ரூடோவிடம் தேடப்படும் நபர்களின் பட்டியல் அளித்தார். அதில் நிஜ்ஜாரின் பெயரும் இருந்தது.

ஆனால் தொடர்ந்து கனடா அரசு நிஜ்ஜாருக்கு ஆதரவாக இருந்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாநிலத்தில் பயங்கரவாதத்தை பரப்புவது தொடர்பான வழக்குகளில் தேடப்பட்ட நிஜ்ஜாரை நாடு கடத்துமாறு பஞ்சாப் காவல்துறை கோரியது. ஆனால் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு பஞ்சாபின் லூதியானா நகரில் 6 பேர் கொல்லப்பட்ட மற்றும் 42 பேர் காயமடைந்த குண்டுவெடிப்பு உட்பட பல வழக்குகளில் நிஜ்ஜார் தேடப்பட்டு வந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory