» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)



விளாத்திகுளம் அருகே வீட்டில் மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்ன முனியசாமி. இவரது மனைவி காளியம்மாள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கார்த்திகை தீபத்திருநாளின் 3-வது நாளான நேற்று முன்தினம் மாலையில் காளியம்மாள் தனது வீடு உள்ளேயும், வெளியேயும் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தார்.

ஒவ்வொரு இடமாக ஏற்றி வந்த காளியம்மாள் கடைசியாக வீட்டுக்குள் இருந்த குளிர்சாதன பெட்டியின் மீது ஒரு மெழுவர்த்தி ஏற்றினார். வீட்டில் யாருமில்லாததால் காளியம்மாள் தனது வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது குளிர்சாதனப்பெட்டி மீது ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தி படிப்படியாக கரைந்து குளிர்சாதனப்பெட்டியில் தீப்பற்றியது. 

சிறிது நேரத்தில் குளிர்சாதனப்பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மேலும் வீட்டுக்குள் இருந்த மின்சாதனப் பொருட்கள், கட்டில், பீரோ, மிக்சி, சமையல் பாத்திரங்கள் என அனைத்து பொருட்களிலும் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்து நாசமாகின. தகவலறிந்ததும் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு உள்ளே சென்றனர்.

மேலும் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரை லாவகமாக மீட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் வீட்டுக்குள் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.அதிர்ஷ்டவசமாக சமையல் கேஸ் சிலிண்டரில் தீப்பிடிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சின்ன முனியசாமி வீட்டில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory