» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல்: வழக்கு பதியாதது ஏன்? - அன்புமணி கேள்வி

வெள்ளி 14, நவம்பர் 2025 12:55:44 PM (IST)

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதல் விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டது குறித்து வழக்குத் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்து 30 மாதங்கள் ஆகும் நிலையில் இன்று வரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. சமூகத்தின் பெரும் கிருமியான ஊழலை ஒழிக்க வேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தை உலுக்கிய மின்மாற்றி ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகளைக் காப்பாற்ற திமுக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை மின்சார வாரியத்திற்கு 45,800 மின்மாற்றிகள் ரூ.1182 கோடிக்கு வாங்கப்பட்டன. ஒவ்வொரு மின்மாற்றியும் 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில் மின்வாரியத்திற்கு ரூ.387 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐகோர்ட்டு கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அறப்போர் இயக்கம் 2023-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி புகார் அளித்தது. இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.

மின்மாற்றி ஊழல் குறித்து அளித்த புகாரின் அடிப்படையில் ஊழல் வழக்குப் பதிவு செய்ய ஆணையிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கிலும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு உரிய பதிலைத் தெரிவிக்காமல் தாமதித்து வருகிறது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, அடுத்த ஒரு வாரம் அல்லது 10 நாள்களில் இது பற்றி முடிவெடுக்கப்படும் என்று கையூட்டுத் தடுப்புப் பிரிவு வாக்குறுதி அளித்தது. ஆனால், 135 நாள்கள் ஆகியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மாறாக, இந்த வழக்கு ஐகோர்ட்டில் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதே கோரிக்கையுடன் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, மின்மாற்றி கொள்முதல் ஊழல் குறித்து வழக்குப்பதிவு செய்வதை திமுக அரசு திட்டமிட்டு தாமதித்து வருகிறது.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல, மின்மாற்றி கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதா? என்பதை தீர்மானிக்க பெரிய ஆய்வு தேவையில்லை. கொள்முதல் விவரங்களை ஆராய்ந்தால், ஊழல் நடந்திருப்பதை முதல் பார்வையிலேயே அறிய முடியும். மின்மாற்றி கொள்முதல் செய்வதற்காக 2021 முதல் 2023 வரை மொத்தம் 10 முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இவற்றில் 7 ஒப்பந்த நடைமுறைகளில் மொத்தம் 37 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ஆனால், உலகின் எட்டாம் அதிசயமாக, அந்த ஒப்பந்தங்களில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும் ஒரே விலையை குறிப்பிட்டிருந்தன. அதைவிட பெரிய ஒன்பதாம் அதிசயம் அந்த நிறுவனங்கள் அனைத்தும் மின்வாரியக் கோரிக்கையை ஏற்று கணிசமான தொகையை குறைத்துக் கொண்டது ஆகும்.

எடுத்துக்காட்டாக 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் கொண்ட 800 மின்மாற்றிகள் வாங்க கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் 23.11.2021-ஆம் நாள் திறக்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற 26 ஒப்பந்ததாரர்களும் சொல்லி வைத்தது போன்று ஒரு மின்மாற்றிக்கு ரூ.13,72,930 என்ற விலையை குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுடன் பேச்சு நடத்தி விலையைக் குறைத்து ரூ.12,49,800 என்ற விலைக்கு வாங்கியதாக மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தைத் தளத்தில் இதன் விலை ரூ.8,91,000 மட்டும் தான். தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் குறிப்பிடும் விலை ரூ.7,89,753 தான். இவை அனைத்தையும் விட குறைவாக ஒரு மின்மாற்றி ரூ.7,87,311 என்ற விலைக்கு ராஜஸ்தான் அரசு வாங்கியுள்ளது. அதாவது சந்தை விலையை விட 37 சதவீதம் கூடுதலாக விலை கொடுத்து மின்மாற்றிகள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த எட்டாம் அதிசயமும், ஓன்பதாம் அதிசயமும் இயல்பாக நடக்க வாய்ப்பே இல்லை. கூட்டு சதியின் மூலம் தான் இது சாத்தியமாகும். ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டு சந்தை விலையை விட 50 சதவீதம் கூடுதலாக விலையை குறிப்பிட்டுள்ளனர். அதன்பின் மின்வாரியம் கேட்டுக் கொண்டதற்கிணங்க சிறிதளவு விலையை குறைத்துள்ளனர். இவை அனைத்தும் திட்டமிட்டு திரைக்கதை எழுதி நடத்தப்பட்ட நாடகம். ஒப்பந்ததாரர்கள் கட்டுபடியாகும் விலையை குறிப்பிடவில்லை என்றால், அந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் அரசு பேச்சு நடத்தி, அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை கொள்முதல் செய்ததிலிருந்தே இதில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகிறது.

மின்மாற்றி கொள்முதலில் ஏற்பட்ட இழப்புக்குக் காரணம் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லகானி, நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி ஆகியோர் தான் என்று குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அவை கையூட்டுத் தடுப்புப் பிரிவிடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு அவர்களுக்கு வெகுமதி வழங்கி வருகிறது.

மின்மாற்றி கொள்முதலில் நடந்த முறைகேடுகளில் முதல் எதிரியாக விசாரிக்கப்பட வேண்டியவர் மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. ஆனால், இன்னொரு ஊழல் வழக்கில் 471 நாள் சிறையிலிருந்த அவரை தியாகி என்று முதல்-அமைச்சரே பாராட்டுகிறார்; அவர் இசைக்கும் ராகத்திற்கு ஏற்ப முதல்-அமைச்சர் ஆடுகிறார். இந்த வழக்கின் இரண்டாவது எதிரியாக விசாரிக்கப்பட வேண்டிய மின்வாரியத்தின் முன்னாள் தலைவர் ராஜேஷ் லகானி பாதுகாப்பான முறையில் மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

மூன்றாவது எதிரியான மின்வாரிய நிதிக் கட்டுப்பாட்டாளர் வி. காசி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர். மின்வாரிய ஊழல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய இவரது வீட்டில் அண்மையில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இவ்வளவுக்குப் பிறகும் அவருக்கு கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மின்வாரியத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளராக திமுக அரசு பதவி உயர்வு கொடுத்து கவுரவித்துள்ளது.

மின்மாற்றி ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் பேரம் என மின்வாரியத்தை ஊழல் வாரியமாக மாற்றியது தான் திமுக அரசின் சாதனையாகும். மின்மாற்றிக் கொள்முதலில் தொடர்புடைய எதிரிகள் மீது வழக்கு தொடர்வதற்கு பதிலாக அவர்களுக்கு சன்மானம் வழங்கும் திமுக ஆட்சியில், இந்த ஊழல் வழக்கில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே, மின்மாற்றி கொள்முதலில் நடைபெற்ற ஊழல்கள், கூட்டுச் சதிகள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் வகையில், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory