» சினிமா » செய்திகள்

நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு : விசு எச்சரிக்கை

சனி 15, பிப்ரவரி 2020 5:14:57 PM (IST)

நெற்றிக்கண் படத்தை அனுமதியின்றி ரீமேக் செய்தால் வழக்கு தொடர்வேன் அப்படத்தின் கதாசிரியர்  விசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1981-ல் ரஜினி நடிப்பில் வெளியான படம் - நெற்றிக்கண். இந்தப் படத்தை தனுஷ் ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியானதையடுத்து மூத்த நடிகரும் இயக்குநருமான விசு, கதை உரிமை குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒரு செய்தி வந்தது. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் தனுஷ் இதைக் கேட்கவும். உரிமைக்காக கவிதாலயா நிறுவனத்திடம் பேசியிருப்பீர்கள். பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி, தெரிந்தோ தெரியாமலோ சில காரியங்களைச் செய்கிறார். 

நெகடிவ் உரிமை தன்னிடம் இருந்தால் கதை உரிமையையும் விற்கிறார்கள். சம்சாரம் அது மின்சாரம் படத்தை ஒவ்வொரு மொழியிலும் விற்றபோது என்னிடம் சம்மதம் கேட்டு ஒரு தொகை கொடுப்பார் சரவணன் சார். வீடு மனைவி மக்கள் படத்தில் நான் நடித்தேன். கதாசிரியர் கிடையாது. ஆனால் ராமநாராயணன் என் அலுவலகத்துக்கு வந்து, இந்தப் படத்துக்கு நீங்கள் தான் அஸ்திவாரம். உங்களுக்கு என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்பார். இல்லை, நான் நடித்தேன். அவ்வளவுதான். 

எனக்குப் பணம் வேண்டாம் என்றேன். பணத்தை எப்படிப் பிரிக்கவேண்டும் என்று கேட்டார். 10 ரூபாய் வந்தால் தயாரிப்பாளரான உங்களுக்கு 5 ரூபாய். 3 ரூபாய் திரைக்கதை எழுதி இயக்கிய கஜேந்திரனுக்கு. 2 ரூபாய் நாடகத்தை எழுதிய துரைராஜுக்கு என்றேன். ஒப்புக்கொண்டார். 5 மொழிகளிலும் உரிமை விற்கப்பட்டது. 5 தடவையும் என் அலுவலகத்துக்கு வந்து கஜேந்திரனுக்கும் துரைராஜுக்கும் பணம் பிரித்து வழங்கப்பட்டது. நான் எந்தப் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை. கவிதாலயாவில் என் சம்பந்தப்பட்ட படங்கள் வேற்று மொழிகளுக்கு விற்கபட்டபோதும் என்னிடம் அனுமதி பெறவில்லை. பாலசந்தருக்காக வாயை மூடிக்கொண்டிருந்தேன். 

தனுஷ் நீங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கப் போகிறீர்களா? உரிமையை கவிதாலயாவிடம் வாங்கிவிட்டீர்களா? அதன் திரைக்கதை, வசனகர்த்தா நான். வேறு யாரிடமும் கேட்கவேண்டாம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள். யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள். நெற்றிக்கண்ணைப் பொறுத்தவரை நான்கு தூண்களாக வேலை செய்தவர்கள் - எஸ்.பி. முத்துராமன், இளையராஜா, அன்றைய கவிதாலயா (பிரமிட்) நடராஜன், நான். அதெப்படி, எனக்குத் தெரியாமல் நெற்றிகண் உரிமையை அவர்கள் விற்கலாம், இவர்கள் வாங்கலாம்? இதுதான் நிறைய எழுத்தாளர்களுக்கு நேர்ந்துகொண்டிருக்கிறது. 

ஒருவேளை எல்லா உரிமைகளையும் நான் கவிதாலயாவுக்கு அளித்திருந்தால் அந்த ஆதாரத்தை புஷ்பா கந்தசாமி என்னிடம் காட்டவேண்டும். அப்படிச் செய்தால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன். கதை அதிகாரம் எழுத்தாளரிடம் தான் உள்ளது. தயாரிப்பாளரிடம் நெகடிவ் உரிமை இருந்தால் மட்டும் போதாது. அப்படி எல்லா உரிமைகளையும் அளித்தாலும் விற்கும்போது எழுத்தாளரின் சம்மதமும் வேண்டும். வயிற்றெரிச்சலாக உள்ளது. ரீமேக் உரிமையில் இயக்குநர்கள் பல லட்சங்கள் வாங்குகிறார்கள். நான் இரண்டு வாழைப் பழம் கூட வாங்கவில்லை. 

தனுஷ், நீங்கள் படம் ஆரம்பித்த பிறகு நான் வழக்கு தொடுத்தால் நீங்கள் வருத்தப்படக்கூடாது. அதனால் தான் இப்போதே சொல்லிவிடுகிறேன். இதை நேரடியாகப் பேசியிருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். அந்த இடத்தில் தன்மானம் தடுக்கிறது. உங்களை யாரோ ரெண்டு பேர் அவர்களுடைய பிள்ளை என சொந்தம் கொண்டாடி, வழக்கு தொடுத்தார்கள். ஆனால் அது தவறு என நான் ஒரு புகைப்படம் வெளியிட்டேன். என் பதிவு உங்களுக்கு வழக்கில் சாதகமாக இருந்திருக்கும். 

அதற்கு நீங்கள் என்னிடம் நன்றி சொல்லவில்லை. நீங்கள் இயக்கிய பவர் பாண்டி படத்தின் அடிப்படைக் கதையும் பெண்மணி அவள் கண்மணி படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் அடிப்படையும் அதுதானே. இதை ஒரு கல்யாணத்தில் உங்கள் அப்பாவும், ராஜ்கிரண் கதாபாத்திரம் உங்கள் கதாபாத்திரன் சாயல் போல இருந்தது என்றார். அப்போதும் என் வீடு தேடி வந்து இரண்டு வாழைப் பழம் கொடுத்து, உங்கள் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அந்தக் கதை குடும்பத்தின் மீது சென்றது, என்னுடைய படம் ராஜ்கிரண் கதாபாத்திரத்தின் வழியாகச் செல்லும் என சொல்லியிருக்கக் கூடாதா? நீங்கள் சொல்லியிருந்தால் நானும் உங்கள் தேடி வந்து நெற்றிக்கண் பிரச்னையைப் பேசியிருப்பேன். 

அதிகாரபூர்வமாக அனுமதி பெற்றுக்கொண்டு நெற்றிக்கண் படத்தை நீங்கள் எடுக்கவேண்டும் என்று இப்போதும் கூறிக்கொள்கிறேன். உங்கள் மாமனாருக்கு அமைந்தது போல உங்களுக்கு மைல்கல்லாக அமையவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார்

திங்கள் 30, மார்ச் 2020 8:37:05 AM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory