» சினிமா » செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு

திங்கள் 10, பிப்ரவரி 2020 4:15:45 PM (IST)

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019ஆண்டு, ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், தபால் வாக்குகளைச் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.  நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக் காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டு, 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்றும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.  

அந்த மனுவில், தமிழ்நாட்டில் பல்வேறு சங்கங்களின் பதவிக்காலம் முடிந்த பின்பும் பழைய நிர்வாகிகள் நிர்வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் நிர்வாகிகள் பதவிக் காலம் முடிந்தும் சங்கத்தை நிர்வகித்து வந்ததாகவும் நடிகர் சங்கப் பிரச்னையில், தமிழக அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டதாகவும் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்றும் மனுவில் விஷால் தெரிவித்துள்ளார்.  தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் இந்தத் தேர்தலை ரத்து செய்துள்ளார் எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு நாளை மறுதினம் (பிப்ரவரி 12) விசாரணைக்கு வர உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory