» சினிமா » செய்திகள்

ராதாரவிக்கு எதிராக தீர்ப்பைப் பெறும்வரை ஓயமாட்டேன்: சின்மயி உறுதி!

வியாழன் 6, பிப்ரவரி 2020 4:47:53 PM (IST)

"நீதிமன்றத்தை நாடி, டப்பிங் ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பைப் பெறும்வரை ஓயமாட்டேன்” என சபதம் எடுத்திருக்கிறார் சின்மயி.

நடிகர்கள் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், இயக்குநர்கள் சங்கத் தேர்தல், ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் எனத் திரைத் துறை சார்ந்து நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்றவைதாம். இவற்றுக்குச் சற்றும் குறையாமல் நடந்து முடிந்திருக்கிறது, திரைத் துறையின் டப்பிங் ஆர்டிஸ்ட் அசோஷியேஷன் தேர்தல். 

இதில், பல வருடங்களாகத் தலைமைப் பொறுப்பேற்று வரும் ராதாரவிக்கு எதிராக, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் புகழ்பெற்ற பாடகி சின்மயி போட்டியிட்டார். ஆனால், திடீரென சின்மயியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, போட்டியின்றி ராதாரவி தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சின்மயி "ஜனநாயக நாட்டில் நடைபெறும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் ஜனநாயக முறைப்படி தானே நடக்க வேண்டும். என்னுடைய மனுவை எதற்காக நிராகரித்தார்கள் என்ற எவ்வித அறிவிப்பும் இல்லாமல், ராதாரவி வெற்றி பெற்றதாக அறிவித்தது மிகப்பெரிய சூழ்ச்சியாகவே தெரிகிறது. 

இங்கு தோற்றது நானாக மட்டும் இருந்திருந்தால் இப்போது பேச மாட்டேன்.  பல வருடங்களாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் பணிபுரியும் நூற்றுக்கணக்கானவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்த 10% பணத்தை வைத்தே டப்பிங் யூனியனை நடத்தி வந்தார்கள். அந்தப் பணத்தில்தான் யூனியன் கட்டடம் கட்டப்பட்டது. 47.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டடத்தை ஒரு கோடிக்கும் மேலாக மதிப்பிட்டு யூனியனின் உறுப்பினர்களின் பணத்தைக் கையாடல் செய்திருக்கின்றனர். 

இந்த ஊழலை வெளிக்கொணர தான் நாங்கள் பாடுபட்டோம். எதிர்த்துப் பேசுபவர்களைக் கொலை செய்வதாக மிரட்டுவதும், கெட்ட வார்த்தைகளில் போன் செய்து திட்டுவதுமென இருந்தபோதே 45% வாக்குகளைப் பெற்றிருந்தார்கள் ராதாரவிக்கு எதிரானவர்கள். நானும் இப்போது அவர்களுக்கு எதிராக இருக்கிறேன் என்பதால் தோல்வி உறுதியானதும் குறுக்கு வழியில் வெற்றிபெற்றுவிட்டார்கள். இவர்கள் ஜனநாயகத்தை மீறியதால் அது நாட்டில் இல்லை என்று ஆகிவிடாது. நான் நீதிமன்றத்தை நாடி, இந்தத் தேர்தல் செல்லாது எனத் தீர்ப்பைப் பெறும்வரை ஓயமாட்டேன்” என சபதம் எடுத்திருக்கிறார் சின்மயி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory