» சினிமா » செய்திகள்

கதாசிரியர் கலைஞானத்துக்குச் சொந்த வீடு வாங்கித்தருவேன் : ரஜினி வாக்குறுதி

வெள்ளி 16, ஆகஸ்ட் 2019 11:28:50 AM (IST)கதாசிரியர் கலைஞானத்துக்குச் சொந்த வீடு வாங்கித் தருவதாக ரஜினி காந்த் வாக்குறுதி அளித்துள்ளார். 

கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானத்துக்கு இயக்குநர் பாரதிராஜா சார்பாகப் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினி பேசியதாவது: ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார் கலைஞானம். ஒரு படம் தயாரிக்கிறேன் என்றார். சூப்பர். யார் ஹீரோ என்று கேட்டேன். நீங்கள் தான் ஹீரோ என்றார். கண்டக்டராக இருந்தேன். ஒரு வீடும் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலே போதும் என்றுதான் அதுவரை நினைத்திருந்தேன். அதுவே எனக்குப் பெரிய விஷயம். சத்தியமாகச் சொல்கிறேன், ஹீரோவாகவேண்டும் என்று நான் ஆசைப்படவேயில்லை. வில்லனாகவே நடித்துவிடலாம் என எண்ணினேன். அப்போது என் சம்பளம் ரூ. 35,000. அவரிடம் 50,000 சம்பளம் கேட்டேன். தரமாட்டார் என எண்ணினேன். ஆனால், அடுத்த நாளே பணம் தந்தார்.

தாலியை விற்று பணம் தந்தார் என அப்போது எனக்கு சத்தியமாகத் தெரியாது. படத்தின் தலைப்பைக் கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. உடனே ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் படம், பாதாள பைரவி. அபூர்வ ராகங்கள் படத்தில் என்னுடைய முதல் ஷாட்டில், பைரவி வீடு இதுதானே என்று கேட்பேன். இந்தப் படத்துக்கு பைரவி எனப் பெயர் வைத்தார். இதனால் ஏதோவொரு சக்தி என்னை இயக்குவதாக எண்ணினேன். அந்தப் படத்தில் கலைப்புலி தாணு, எனக்கு கிரேட் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் கொடுத்தார். நான் வேண்டாம்  என்றேன். கிரேட் எடுத்துவிடுகிறேன். சூப்பர் ஸ்டார் எடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டார். 

படம் வெளியான 2-வது நாள், படப்பிடிப்பில் இருந்த என்னை, பைரவி படம் ஓடிய ராஜகுமாரி திரையரங்குக்கு அழைத்துச் சென்றார் கலைஞானம். படம் ஹவுஸ்ஃபுல். கிளைமாக்ஸுக்குச் செம கைத்தட்டல். வெளியே வந்த என்னை ரசிகர்கள் அப்படியே தூக்கிவிட்டார்கள். நான் கதாநாயகன் ஆன பிறகு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னைச் சுற்றிக்கொண்டார்கள். இதன்பிறகு நான் ஓடிக்கொண்டே இருந்தேன். நான் ஒரு முட்டாள். அடுத்து என்ன படம் பண்றீங்க என்று கலைஞானத்திடம் கேட்டிருக்கலாம். அவரும் கேட்கவில்லை. வாழ்க்கையை ஈஸியாக எடுத்துக்கொள், கடமைகளை சீரியஸாக செய் என்று அவர் அறிவுரை கூறுவார். 

இப்போது அவர் வாடகை வீட்டில்தான் இருக்கிறார் என்று நடிகர் சிவக்குமார் சொல்லித்தான் தெரியும். மிகவும் வருத்தமான விஷயம். அமைச்சர் கடம்பூர் ராஜு, முதல்வரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாகப் பெரிய மனத்துடன் கூறியுள்ளார். ஆனால் இந்த வாய்ப்பை அரசாங்கத்துக்கு நான் தரமாட்டேன். அவருடைய மூச்சு என்னுடைய வீட்டில்தான் போகவேண்டும். பாக்யராஜ் சார், உடனே ஒரு வீடு பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். கலைஞானம் சார் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்று பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory