» சினிமா » செய்திகள்

ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் மறைவு: அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், அஞ்சலி!!

புதன் 7, ஆகஸ்ட் 2019 12:48:07 PM (IST)

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பார்த்தசாரதி காலமானார்.  அவருக்கு வயது 93. நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதி.  நாடக எழுத்தாளரான இவர் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் என்ற நாடக குழுவை நடத்தி வந்தார்.  இந்த குழுவில் நடிகர்கள் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், மேஜர் சுந்தர்ராஜன், நடிகைகள் ஜெயலலிதா, அவரது தாயார் சந்தியா, நடிகை லட்சுமி உட்பட பல கலைஞர்கள் இருந்துள்ளனர்.  நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும் இந்த குழுவில் ஒருவர்.

ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி ராஜலட்சுமி.  கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலம் பாதிப்பினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பால் காலமானார். சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டம் பெற்ற அவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.  கடந்த 1958ம் ஆண்டு சென்னையில், பத்ம சேஷாத்ரி பாலா பவன் என்ற பெயரில் பள்ளி கூடமொன்றை துவக்கி, கல்வி சேவையில் தன்னை அர்ப்பணித்து கொண்டார்.  சிறந்த கல்வியாளராக செயல்பட்ட இவரது சேவையை பாராட்டி கடந்த 2010ம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி இவரை கவுரவித்தது.

சென்னை தி.நகரில் அமைந்த திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் நடைபெறும்.அவரது மறைவுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அ.தி.மு.க. அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.  அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory