» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து: மொராக்கோ, போர்ச்சுக்கல் அணிகள் காலிறுதிக்கு தகுதி!

புதன் 7, டிசம்பர் 2022 11:48:32 AM (IST)

உலக கோப்பை கால்பந்து போட்டியில்  மொராக்கோ, போர்ச்சுக்கல் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் பிரேசிலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது. 

இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கல் கோல் மழை பொழிந்தது. போர்ச்சுக்கலின் ராமோஸ் 51-வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55-வது நிமிடத்திலும், ராமோஸ் 67-வது நிமிடத்திலும், 92-வது நிமிடத்தில் ரபேல் லியோ தலா ஒரு கோல் அடித்தனர். சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார். இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

மொராக்கோ அணி 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அணியான ஸ்பெயின், 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ அணியை சந்தித்தது.

இரு அணியினரும் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு அவ்வப்போது கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் கடைசி வரை தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு 'பிரிகிக்' வாய்ப்பு கிட்டியது. அந்த வாய்ப்பில் டேனி ஒல்மோ அடித்த பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாஸ்சின் தடுத்து வெளியேற்றினார்.

வழக்கமான நேரத்தில் (90 நிமிடம்) ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்ததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பத்தை சூழ்ந்து தாக்குதல் நடத்தினாலும் கோல் வலைக்குள் பந்தை அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கபட்டது. 

மொராக்கோ அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. அந்த அணியின் அப்டெல்ஹாமிட் சபிரி, ஹகிம் ஜியேச், அச்ராப் ஹகிமி ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கினார். 3-வது வாய்ப்பில் பாத் பினோன் அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். ஸ்பெயின் அணி தங்களது முதல் 3 வாய்ப்புகளிலும் கோல் அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. அந்த அணியின் பாப்லோ சராபி பந்தை கோல் கம்பத்தில் அடித்து வீணடித்தார். கார்லோஸ் சோலெர், கேப்டன் செர்ஜியோ ஆகியோர் அடித்த பந்துகளை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார்.

பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து முதல்முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்றது. கால்இறுதியில் மொராக்கோ அணி, போர்ச்சுகல் அணியை சந்திக்கிறது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory