» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூர்யகுமார், ராகுல் அதிரடி : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

திங்கள் 3, அக்டோபர் 2022 8:04:24 AM (IST)



சூர்யகுமார் யாதவ் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடியாக அரை சதங்களை விளாச, இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்று தொடரை கைப்பற்றியது. 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி குவஹாட்டியில் நேற்று மாலை நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் குவித்தது. 

இந்திய அணியின் தரப்பில் அதிரடி காட்டிய சூர்யகுமார் வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் குவித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 28 பந்துகளில் 49 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதனையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்குகியது தென்னாப்பிரிக்கா அணி. முதலில் களமிறங்கிய தெம்பா பவுமா டக் அவுட் ஆக தென்னாப்பிரிக்க அணி திணறியது. எனினும் குவிண்டன் டி காக் அதிரடியாக ஆடி அணியின் ரன்களை உயர்த்தினார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளுக்கு 69 ரன்கள் விளாசினார். 



இதில் 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸ்களும் அடக்கம். தென்னாப்பிரிக்காவின் ரிலி ரோசோ 2 பந்துகளில் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 106 ரன்கள் எடுத்த டேவிட் மில்லர்  ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது.  இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

சூர்யகுமார் புதிய சாதனை 

டி20 ஃபாா்மட்டில் இந்த ஆட்டத்தின் மூலம் மொத்தமாக 1000 ரன்களை கடந்திருக்கும் சூா்யகுமாா் யாதவ், சா்வதேச அளவில் டி20-யில் குறைந்த பந்துகளில் (573) ஆயிரம் ரன்களை எட்டிய அதிவேக வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளாா். ஒரு காலண்டா் ஆண்டில் டி20 ஃபாா்மட்டில் 50 சிக்ஸா்களை விளாசிய முதல் பேட்டா் என்ற பெருமையையும் சூா்யகுமாா் பெற்றிருக்கிறாா்.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் 16 முதல் 20 வரையிலான டெத் ஓவா்களில் 82 ரன்கள் கொடுத்துள்ளது இந்தியா. டி20 வரலாற்றின் டெத் ஓவா்களில் இதுவே அதிகபட்சம்.இந்திய அணி பதிவு செய்துள்ள இந்த ஸ்கோா், டி20 ஃபாா்மட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எந்தவொரு அணியும் இதுவரை பதிவு செய்யாத அதிகட்சமாகும்.  இந்த ஆட்டத்தில் டி காக் - மில்லா் ஜோடி 174 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்ததே, டி20 வரலாற்றில் 4-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்பில் அதிகபட்சமாகும்.

கோலியின் பெருந்தன்மை...

இந்திய இன்னிங்ஸில் கடைசி ஓவா் தொடக்கத்தில் கோலி 49 ரன்களுடன் அரைசதம் எட்டும் நிலையில் இருந்தாா். அப்போது நான்-ஸ்டிரைக்கிங் எண்டில் இருந்த கோலியை, ஸ்டிரைக்கிங் எண்டுக்கு மாறிக்கொள்ளுமாறு கேட்டாா் காா்த்திக். ஆனால், பெருந்தன்மையுடன் அதை மறுத்து காா்திக்கை பேட் செய்யவிட்டாா் கோலி. அவ்வாறு கடைசி ஓவரில் காா்த்திக் அடித்த 16 ரன்கள் தான், தென்னாப்பிரிக்காவின் வெற்றியைப் பறித்த ரன்கள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory