» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜிம்பாப்வே ஒருநாள் கிரிக்கெட் தொடரை முழுமையாக வென்றது இந்தியா: சச்சினை முந்தினார் ஷுப்மன் கில்

செவ்வாய் 23, ஆகஸ்ட் 2022 10:32:04 AM (IST)



ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்றியது.

ஹராரேவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் குவித்தது.தனது முதல் சதத்தை விளாசிய ஷுப்மன் கில் 97 பந்துகளில், ஒரு சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 130 ரன்கள் எடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய இஷான் கிஷன் 61 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. பிராடு இவான்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

290 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. 36 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் சிகந்தர் ராசா மட்டையை சுழற்றினார். 88 பந்துகளில் சதம்விளாசிய அவரது அதிரடி ஆட்டம்ஜிம்பாப்வே அணிக்கு நம்பிக்கையை கொடுத்தது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் அவேஷ் கான் வீசிய 48-வது ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் பிராடு இவான்ஸ் (28) ஆட்டமிழந்தார்.

12 பந்துகளில் 17 ரன்களே தேவையாக இருந்த நிலையில் ஷர்துல் தாக்குர் வீசிய 49-வது ஓவரின் 4-வது பந்தில் சிகந்தர் ராசா ஆட்டமிழந்தார். சிகந்தர் ராசா 95 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசினார். இந்த ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. அவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 3-வது பந்தில் கடைசி வீரராக விக்டர் நியாச்சி (0) போல்டானார். முடிவில் ஜிம்பாப்வே அணி 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. இந்திய அணி சார்பில் அவேஷ் கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். தீபக் ஷாகர், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

சச்சினை முந்தினார் ஷுப்மன்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 1998-ல் 127 ரன்கள் விளாசியதே இந்திய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த சாதனையை நேற்று ஷுப்மன் கில் 130 ரன்கள் விளாசி முறியடித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory