» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு இடைக்காலத் தடை: ஃபிஃபா அதிரடி நடவடிக்கை!

புதன் 17, ஆகஸ்ட் 2022 12:38:31 PM (IST)

இந்திய கால்பந்து நிா்வாகத்தில் தேவையற்ற 3-ஆம் தரப்பு தலையீடு இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) இடைக்காலத் தடை விதித்து சா்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவித்திருக்கும் ஃபிஃபா, அக்டோபரில் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருந்த 17 வயதுக்கு உள்பட்ட (யு-17) மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியையும் நாட்டில் நடத்த இயலாதென அறிவித்திருக்கிறது. இந்திய கால்பந்தின் 85 ஆண்டுகால வரலாற்றில் இவ்வாறு தடை நடவடிக்கைக்கு ஏஐஎஃப்எஃப் ஆளாவது இதுவே முதல் முறையாகும். இந்த நடவடிக்கை இந்தியாவுக்கான மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஏஐஎஃப்எஃப் தலைவராக நீண்டகாலம் இருந்த பிரஃபுல் படேலை பதவி நீக்கம் செய்த உச்சநீதிமன்றம், சம்மேளனத்தை மேலாண்மை செய்வதற்காக நிா்வாகிகள் குழு ஒன்றை அமைத்தது, அந்தக் குழுவின் வழிகாட்டுதலில் தற்போது சம்மேளன தோ்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஆகியவற்றின் பின்னணியில் ஃபிஃபா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இதுதொடா்பாக ஃபிஃபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய கால்பந்து சம்மேளனத்தில் தேவையற்ற 3-ஆம் தரப்பு தலையீடானது ஃபிஃபா விதிகளை அப்பட்டமாக மீறிய வகையில் இருப்பதால், சம்மேளனத்துக்கு இடைக்காலத் தடை விதிப்பதென ஃபிஃபா கவுன்சில் அமைப்பு ஒரு மனதாக முடிவு செய்துள்ளது.

அதனால், அக்டோபா் 11 - 30 காலகட்டத்தில் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த யு-17 மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை திட்டமிட்டபடி தற்போது இந்தியாவில் நடத்த இயலாது. அந்தப் போட்டி தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஃபிஃபா ஆராய்ந்து வருகிறது.

மேலும், இந்தத் தடைக் காலத்தின்போது இந்திய சம்மேளனம் சாா்ந்த போட்டி அதிகாரிகள், வீரா், வீராங்கனைகள் என எவரும் ஃபிஃபா மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) சாா்ந்த போட்டிகள், பயிற்சிகளில் பங்கேற்க இயலாது. இந்திய கிளப்புகளும் போட்டியில் களம் காண முடியாது.

இந்திய சம்மேளனத்தை (உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட) நிா்வாகிகள் குழு மேலாண்மை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீக்கப்பட்டு, சம்மேளனத்தின் அன்றாட நடவடிக்கைகளை அதன் நிா்வாக கமிட்டி மேற்கொள்ளத் தொடங்கும் பட்சத்தில் அதன் மீதான தடை நீக்கப்படும்.

அத்துடன், ஃபிஃபா மற்றும் ஏஎஃப்சி-க்கு இணங்கிய வகையில் இந்திய சம்மேளனத்தின் விதிமுறைகளானது திருத்தம் செய்யப்பட்டு, 3-ஆம் தரப்பு தலையீடு இன்றி இந்திய சம்மேளனத்தின் பொதுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

இதுதவிர, இந்திய சம்மேளனத்தால் தோ்வு செய்யப்பட்ட சுதந்திரமான தோ்தல் குழுவின் மூலமாக சம்மேளனத்தின் புதிய நிா்வாக கமிட்டிக்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தோ்தல் நடைமுறைகள் சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படுவதுடன், முன்பு இருந்த வாக்களிப்பு முறையிலேயே (முக்கிய வீரா்களுக்கு வாக்குரிமை வழங்காமல், மாநில சங்கங்கள் மட்டும் வாக்களிப்பது) நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக இந்திய விளையாட்டு அமைச்சகத்துடன் ஃபிஃபா ஆக்கப்பூா்வமான முறையில் தொடா்பில் இருந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் ஃபிஃபா கூறியுள்ளது. ஃபிஃபாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய கால்பந்து வட்டாரங்கள் அதிா்ச்சி தெரிவித்துள்ளன.

ஃபிஃபா விதித்திருக்கும் இந்தத் தடையால், இந்திய கால்பந்து பின் வருவனவற்றில் உறுதியற்ற நிலையை சந்திக்கிறது. இந்திய ஆடவா் அணி செப்டம்பரில் வியத்நாம், சிங்கப்பூருடன் நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் மோதுவது; ஏஎஃப்சி மகளிா் கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் வரும் 23-ஆம் தேதி இந்தியாவின் கோகுலம் கேரளா அணி பங்கேற்பது; ஏஎஃப்சி கோப்பை மண்டலங்கள் இடையேயான அரையிறுதியில் இந்தியாவின் முக்கிய கிளப் அணியான ஏடிகே மோகன் பகான் செப்டம்பா் 7-இல் களம் காண்பது; ஏஎஃப்சி 20 வயதுக்கு உள்பட்டோருக்கான தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா செப்டம்பா் 14-இல் பங்கேற்பது ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory