» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!

சனி 30, ஜூலை 2022 11:01:35 AM (IST)



மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளனர். இதனால் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்த கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது, இந்திய அணியினருக்கு கருப்பு காய்களை பிரதமர் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர், வீராங்கனைகள் கருப்பு காய்களைக் கொண்டு விளையாடுவர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளைக் கொண்டது. கிளாசிக்கல் ஸ்விஸ் லீக் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்), உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) ஆகியவற்றுடன் இணைந்து தமிழக அரசு சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் முதல் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. ஒலிம்பியாட் போட்டியின் முதல் வெற்றியை ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்காக விளையாடிய ரவுனக் சாத்வானி பதிவு செய்தார். அவர் தனது 36-வது நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை சாய்த்து முதல் வெற்றியை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இந்திய பி மகளிர் அணி சிறப்பாக விளையாடி, வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதேபோல இந்திய சி பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோரும் வெற்றிகளை குவித்தனர். ஹாங்காங் அணியின் சிகப்பி கண்ணப்பனை தனது 49-வது நகர்த்தலில் ஈஷா கர்வாடே வெற்றிகொண்டார். இந்திய வீராங்கனை பிரதியுஷா போத்தா, ஹாங்காங் அணியின் லாம் கான் யானை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். முதல் சுற்றில் இந்தியவீரர், வீராங்கனைகள் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்தனர். இதனால் இந்திய வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று 2-ம் சுற்று ஆட்டங்கள் நடக்கவுள்ளன. இந்தப் போட்டி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஆக.10-ம் தேதி பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory