» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகல தொடக்கம்: பிரதமர், முதல்வர் பங்கேற்பு

வெள்ளி 29, ஜூலை 2022 8:34:41 AM (IST)



சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 44வது தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு மார்ச் மாதம் கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு ஏற்கும் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் மாதம் 3வது வாரத்தில் அறிவித்தார். கூடவே பணிகளை மேற்கொள்ள முதல் கட்டமாக 100 கோடி ரூபாயை ஒதுக்கினார். அதன் பிறகு புயலென ஏற்பாடுகள் வேகம் பிடித்தன. அறிவித்த ஓரிரு நாட்களில் போட்டி நடத்தும் இடம் பழமையும், பெருமையும் மிக்க மாமல்லபுரம் என்பது முடிவானது.

உடனடியாக மாமல்லபுரம் கடற்கரையில் இருக்கும் நட்சத்திர, உல்லாச விடுதிகளில் இருந்த 2000 அறைகள் வீரர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு அரங்கம் அமைத்தல், வாகனங்கள் ஏற்பாடு செய்தல், விளம்பரங்கள் செய்தல் என்று ஆளுக்கொரு பணியை ஏற்க சென்னையும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் திருவிழா கோலம் பூண ஆரம்பித்தது. செஸ் ஒலிம்பியாட் குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்தவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும் விளம்பர பாடல்கள், விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக போட்டிக்கென தனிச் சின்னம் ‘தம்பி’ அறிமுகப்படுத்தப்பட்டது.

குதிரை தலையுடன் கூடிய அந்த தம்பி சின்னம் படங்களாகவும், சிலைகளாகவும் முக்கிய இடங்களில், பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டன. ‘தம்பி உடையான் படைக்கஞ்சான்’ என்ற சொற்றொடருக்கு ஏற்ப அமைச்சர்களும், அதிகாரிகளும் தம்பி போல் வேகமாக சுழன்று பணிகளை செய்தனர். அதனை அடிக்கடி பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருத்தங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அதுமட்டுமின்றி முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ‘ஒலிம்பிக் சுடர் ஓட்டமும்’ நடைபெற்றது.

இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் போது மாமல்லபுரத்தில் இருந்து சுடர் ஓட்டம் தொடங்குமாம். போட்டி நடத்த 52 ஆயிரம் சதுர அடி, 22 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் விளையாட 700 மின்னணு சதுரங்க பலகைகள் ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் இடத்தில் 198 டாக்டர்கள் உட்பட 433பேரைக் கொண்ட 8 மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கூடவே 30 அவசர ஊர்திகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போட்டி, விழா நடைபெறும் இடங்களில் 7 அடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.



போட்டியில் பங்கேற்க 187 நாடுகளை சேர்ந்த 1736 வீரர்கள் பங்கேற்கின்றனர். சென்னை வரும் வெளிநாட்டு வீரர்களை மாலை மரியாதையுடன் வரவேற்று அழைத்துச் செல்கின்றனர்.இப்படி குறுகிய காலத்தில் உலகை வியக்க வைக்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ் நாடு அரசு செய்துள்ளது. இந்நிலையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory