» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20யில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரைக் கைப்பற்றியது

புதன் 29, ஜூன் 2022 8:07:10 AM (IST)



அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வ்து டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

அயர்லாந்து, இந்தியா இடையிலான 2-வது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ருதுராஜ் கெய்க்வாட், அவேஷ் கான் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்குப் பதில் சஞ்சு சாம்சன், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர். கிஷன் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சாம்சனுடன் இணைந்த தீபக் ஹூடா துரிதமாக ரன் சேர்த்தார். சாம்சனும் அவருடன் இணைந்து பவுண்டரிகள் அடிக்கத் தொடங்கினார். பவர் பிளே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. பவர் பிளேவுக்கு பிறகும் இந்த இணை அதிரடியை நீடித்தது. ஹூடா 27-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது.

அரைசதம் அடித்த பிறகு சதத்தை நோக்கி ஹூடா துரிதமாக நகரத் தொடங்கினார். அவர் 79 ரன்களை எட்டியபோது சஞ்சு சாம்சனும் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் முதல் அரைசதம் இது. இதையடுத்து, இந்த இணை ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்த அயர்லாந்து வீரர்கள் செய்வதறியாது திணறினர். 15 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.

இந்த இணை கடைசி நேர அதிரடிக்குத் தயாராகி 17-வது ஓவரின் முதல் பந்தை சஞ்சு சாம்சன் சிக்ஸருக்கு அனுப்பினார். ஆனால், அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். சாம்சன் 42 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு சாம்சன், ஹூடா இணை 176 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் அதே ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசினார். 

ஹூடாவும் 55-வது பந்தில் சதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதத்தை எட்டும் 4-வது இந்திய வீரர் ஹூடா. ஹூடா சதமடித்த ஓவரில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஹூடாவும் அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். ஹூடா 57 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அடுத்து வீசப்பட்ட 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் மற்றும் அக்ஷர் படேல் முதல் பந்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹார்திக் பாண்டியா மட்டும் கடைசி ஓவரில் ஸ்டிரைக்கில் இருந்தால். 3-வது பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால், 5-வது பந்தில் ஹர்ஷல் படேலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் புவனேஷ்வர் குமார் 1 ரன் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் குவித்துள்ளது.

இதனையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது அயர்லாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பால் ஸ்ட்ரிலிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிரினி களமிறங்கினர். இந்த இணை தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 5 ஓவர்களில் 60 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிய பால் இந்த இணையை ரவி பிஷ்னோய் தனது சுழலில் விழ வைத்தார். பால் ஸ்டிரிலிங் 40 ரன்களில் ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய கேரத் டெலானி வந்த வேகத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர்,கேப்டன் ஆண்ட்ரூவுடன் ஜோடி சேர்ந்தார் ஹாரி டெக்டார். இந்த இணை சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்ததன் மூலம் அணியின் ரன் ரேட் சரியான வேகத்தில் பயணித்தது. அதிரடியாக ஆடிய ஆண்ட்ரூ அரைசதம் கடந்தார். அவர் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில், 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். ஹாரி டெக்டார் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணியின் விக்கெட் கீப்பர் லார்கேன் டக்கர் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அயர்லாந்துக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்த தருணத்தில் ஜியார்ஜ் டாக்ரெல் மற்றும் மார்க் இணை அயர்லாந்தின் வெற்றிக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இந்த இணை சிறப்பாக விளையாட அயர்லாந்து அணியின் ரன் ரேட் சீராக வெற்றிப் பாதையை நோக்கி நகர்ந்தது.  கடைசி இரண்டு ஓவர்களில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 30 ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டது. இந்த நிலையில் ஹர்ஷல் படேல் வீசிய 19 ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் இறுதி ஓவரில் அந்த அணிக்கு 17 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

இறுதி ஓவரை உம்ரான் மாலிக் வீச வந்தார். இறுதி ஒவரின் இரண்டாவது பந்தை அவர் நோபாலாக வீசினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அயர்லாந்து அணி தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரிகளை அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி இரண்டு பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டன. சிறப்பாக பந்து வீசிய உம்ரான் மாலிக் கடைசி இரு பந்துகளில் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மேலும், டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய தரப்பில் புவனேஷ்குமார், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory