» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டிஎன்பிஎல் கிரிக்கெட்: வெற்றியுடன் துவங்கியது நெல்லை; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் போராடி தோல்வி!

வெள்ளி 24, ஜூன் 2022 11:39:43 AM (IST)



நெல்லையில் துவங்கிய டிஎன்பிஎல் துவக்க ஆட்டத்தில் நெல்லை அணி வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டம் டை ஆகி பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா நெல்லையில் நேற்று தொடங்கியது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

நெல்லை சங்கர் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

நெல்லை அணியின் ரஞ்சன் பால் (7), பாபா அபராஜித் (2), பாபா இந்திரஜித் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சஞ்சய் யாதவ் பவுண்டரி, சிக்சர் என அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் கடக்க, அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

சூரியபிரகாஷ் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் விளாசினார். அவர் 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த ரன்னை எட்டினார்.

இதனால் நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அஷிதேஷ் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் இலக்கை நெருங்கியது. 

கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட போது ஹரீஷ் குமார் பவுண்டரி அடித்தார். இதனால் ஆட்டம் சமன் ஆனது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. கேப்டன் கவுசிக் காந்தி 64 ரன் எடுத்தார். ஆட்டம் சமன் ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்தது. 10 ரன் இலக்கை நோக்கி அடுத்து விளையாடிய நெல்லை அணி ஒரு விக்கெட்டை இழந்து 5-வது பந்தில் இலக்கை எடுத்து வென்றது.


மக்கள் கருத்து

KARNARAJJul 10, 1656 - 10:30:00 AM | Posted IP 162.1*****

heading to be corrected. Nellai won

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory