» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 உலக கோப்பை : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

வியாழன் 11, நவம்பர் 2021 3:59:15 PM (IST)



இங்கிலாந்தை 5 விக்கெட்டில் வீழ்த்தி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி.

டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்தது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்கள் சேர்த்தனர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர், 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ட்டின் கப்தில் 3-வது பந்தில் வெளியேறினார். அடுத்த வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.

இதனால் நியூசிலாந்து 2.4 ஓவரில் 13 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன், டேவன் கான்வே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி நெருக்கடிக்குள்ளானது. இந்த ஜோடி 13.4 ஓவரில் 95 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. டேவன் கான்வே 38 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 57 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இங்கிலாந்து வெற்றிபெறும் நிலை இருந்தது.17-வது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் ஜேம்ஸ் நீஷம் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது.  ஆகவே, ஒரே ஓவரில் ஆட்டம் நியூசிலாந்து கைக்குள் வந்தது.

கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை அடில் ரஷித் வீசினார். இந்த ஓவரில் நீஷம் ஒரு சிக்ஸ் விளாச, மிட்செல் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இருந்தாலும் கடைசி பந்தில் ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார். நீஷம் அதிரடி நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

கடைசி 2 ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் டேரில் மிட்செல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.டேரில் மிட்செல் 47 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory