» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 உலக கோப்பை: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்

திங்கள் 25, அக்டோபர் 2021 10:19:11 AM (IST)டி-20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் துபையில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அஸாம் களமிறங்கினர். 

இந்த இணை தொடக்கம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். விக்கெட் வாய்ப்புக்கான சூழலுக்கு சற்றும் இடம் தராத வகையில் நேர்த்தியான பேட்டிங்கை இருவரும் வெளிப்படுத்தினர். பவர் பிளேவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்தது.  இதன்பிறகு, வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா சுழலில் ரன் வேகம் சற்று கட்டுப்பட்டது. 

ஆனால், அடுத்தடுத்த ஓவர்களில் அவர்களது பந்துகளையும் இந்த இணை விளாசத் தொடங்கியது. 6-வது பந்துவீச்சாளர் இல்லாதது இந்திய அணிக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. பவுண்டரிகள் கிடைக்காத போதிலும், அவ்வப்போது ஓட்டங்களிலேயே ரன் எடுத்து ரன் ரேட்டை கட்டுப்பாட்டில் வைத்தனர். 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்தது.

வருண் சக்ரவர்த்தி வீசிய 13-வது ஓவரில் ரிஸ்வான் மற்றும் அஸாம் தலா 1 சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினர். இந்த சிக்ஸர் மூலம் அஸாம் அரைசதத்தைக் கடந்தார். ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் அசாம் இரண்டு பவுண்டரிகள் விளாச கடைசி 36 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை பாகிஸ்தானுக்கு உருவானது. இதிலிருந்து தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி பாபர் அஸாம், ரிஸ்வான் இணை வெற்றி இலக்கை நெருங்கியது. ரிஸ்வானும் அரைசதத்தைக் கடந்தார்.

கடைசி 3 ஓவர்களில் 17 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தபோது முகமது ஷமி 18-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் 3 பந்துகளை ரிஸ்வான் சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளுக்கு விளாசி மிரட்டினார். அதே ஓவரில் பாபர் அஸாம் இரண்டு ரன்களை எடுக்க உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்தது பாகிஸ்தான்.  17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபர் அஸாம் 52 பந்துகளில் 68 ரன்களும், முகமது ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்களும் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory