» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சுனில் நரைன் அபாராம் : பெங்களூரு அணியை வெளியேற்றியது கொல்கத்தா!

செவ்வாய் 12, அக்டோபர் 2021 11:14:32 AM (IST)



பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சுனில் நரைன் அசத்த, ஐ.பி.எல். தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல்லும், கோலியும் களமிறங்கினர்.

பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. அதன்பின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியதால்  பெங்களூரு அணி 20  ஓவர்கள்  முடிவில்  7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதனால் பவர்-பிளே முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்காமல் பந்துவீசினர். இதனால்  கொல்கத்தா அணி வீரர்கள் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். முக்கியமான கட்டங்களில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. எனினும் சுனில் நரைன் அதிரடியாக ஆடி கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 15 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. சகிப் அல் ஹாசன் கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



எலிமினேட்டர் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் சார்ஜாவில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல். தொடரை விட்டு வெளியேறியது.

வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களின் வெற்றியை நரேன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எளிதாக்கிவிட்டார். தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். சேஸிங் செய்யும்போதும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். உலகத் தரம்வாய்ந்த நரேன், வரும், சஹிப் ஆகிய 3 பேருடன் சேர்ந்து விளையாடுவது என்பது கவுரவம். 

எங்களுடைய பேட்டிங் வரிசை ஆழமானது, பலமானதாக இருக்கிறது. குவாலிஃபயர் 2-ல் இதே ஷார்ஜா மண்ணில் டெல்லி கேபிடல்ஸ் அணியைச் சந்திக்கிறோம். அந்தசூழலுக்கு ஏற்றார்போல் மீண்டும் சிறப்பாக விளையாடுவோம். டி20 போட்டியில் நரேன் இன்றைய ஆட்டம் சிறப்பானது. சிறப்பாக ஒரு வீரர் விளையாடினால், நிச்சயம் அந்த அணி வெற்றியை நோக்கி தள்ளப்படும். இதை நான் விரும்புகிறேன். இது இன்னும் சிறப்பாகத் தொடர வேண்டும் என்பதையே எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory