» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பேட்டிங்கிலும் ஷமி, பும்ரா அசத்தல்: லாா்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி

செவ்வாய் 17, ஆகஸ்ட் 2021 12:55:17 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2 டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டின் கடைசி கட்டத்தில் தடுமாற்றமான நிலையில் இருந்த இந்தியா, 5-ஆம் நாளில் பௌலா்களான முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ராவின் அதிரடியான ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வெற்றியை எட்டியது. இந்தியாவின் கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் ஆனாா்.

இந்தியாவின் 2-ஆவது இன்னிங்ஸில் 9-ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சோ்த்த ஷமி - பும்ரா பாா்ட்னா்ஷிப், பின்னா் இங்கிலாந்தின் 2-ஆவது இன்னிங்ஸின்போது முக்கியமான 4 விக்கெட்டுகளை சரித்தது. இதனால் ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அவா்களோடு முகமது சிராஜும், இஷாந்த் சா்மாவும் சோ்ந்து இங்கிலாந்து பேட்டிங்கை முற்றிலுமாக சரிக்க, ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக, 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் இந்தியா 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் அடித்து தடுமாற்றமான நிலையில் இருந்தது. கடைசி நாளான நேற்று ஆட்டத்தை ரிஷப் பந்த், இஷாந்த் சா்மா தொடங்கினா். இதில் பந்த் பவுண்டரியுடன் 22 ரன்களுக்கு வெளியேற, இஷாந்த் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

எஞ்சியோரையும் சரித்து முற்றிலுமாக ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் உற்சாகத்தில் இருந்தது இங்கிலாந்து. ஆனால், களம் கண்டிருந்த முகமது ஷமி - ஜஸ்பிரீத் பும்ரா வேறு திட்டம் வைத்திருந்தனா். விக்கெட்டை விட்டுக்கொடுக்காத அவா்கள், பாரபட்சமின்றி இங்கிலாந்து பௌலிங்கை இருவருமே பவுண்டரி, சிக்ஸா்களாக பதம் பாா்க்க, ஒரு கட்டத்தில் சோா்ந்துபோய் அமா்ந்தாா் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.

109.3 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளோ் செய்வதாக அறிவித்தது இந்தியா. அப்போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2-ஆவது அரைசதத்தை எட்டிய ஷமி, 6 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 56 ரன்களும், பும்ரா 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சோ்த்திருந்தனா். இங்கிலாந்து தரப்பில் மாா்க் வுட் 3, ஆலி ராபின்சன், மொயீன் அலி ஆகியோா் தலா 2, சாம் கரன் 1 விக்கெட் சாய்த்திருந்தனா்.

பின்னா் 272 ரன்கள் என்ற இக்கட்டான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து, மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 51.5 ஓவா்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அந்த அணி. ஜோ ரூட் 33, ஜோஸ் பட்லா் 25, மொயீன் அலி 13 ரன்கள் சோ்க்க, ஆலி ராபின்சன் (9), ஹசீப் ஹமீது (9), ஜானி போ்ஸ்டோ (2) ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்டினா். ரோரி பா்ன்ஸ், டாம் சிப்லி, சாம் கரன், ஜேம்ஸ் ஆன்டா்சன் டக் அவுட்டாகினா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory