» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் தோல்வி தொடரை இழந்தது இந்திய அணி
திங்கள் 30, நவம்பர் 2020 8:49:05 AM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரையும் இழந்தது .
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த மார்கஸ் ஸ்டோனிசுக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டர் மோசஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் மாற்றம் இல்லை. ‘டாஸ்’ வென்றஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர்.
முதலாவது ஆட்டத்தை போன்றே சில ஓவர்கள் நிதானம், அதன் பிறகு அதிரடி என்று நேர்த்தியாக விளையாடிய இவர்கள் வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்தனர். வார்னர்-பிஞ்ச் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் (22.5 ஓவர்) சேர்த்து பிரிந்தனர். பிஞ்ச் 60 ரன்களில் (69 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் இந்த முறையும் இந்திய பந்து வீச்சை நொறுக்கினார். மறுமுனையில் வார்னர் 83 ரன்களில் (77 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) தேவையில்லாமல் 2-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட்டில் வீழ்ந்தார்.
இதன் பின்னர் சுமித்- மார்னஸ் லபுஸ்சேன் ஜோடியினர் ரன்ரேட்டை சரிய விடாமல் பார்த்துக் கொண்டனர். அதிரடி காட்டிய சுமித், ஷமி, பும்ராவின் ஓவர்களில் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் தெறிக்கவிட்டார். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் அவர்களின் ரன்வேகத்துக்கு அணைபோட முடியவில்லை. அபாரமாக ஆடிய சுமித் 62 பந்துகளில் தனது 11-வது சதத்தை எட்டினார். முதலாவது ஆட்டத்திலும் அவர் 62 பந்துகளிலேயே சதத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. அவரது ரன்வேட்டைக்கு ஒரு வழியாக ஹர்திக் பாண்ட்யா முற்றுப்புள்ளி வைத்தார். ஆப்-சைடுக்கு வெளியே பாண்ட்யா வீசிய பந்தை சுமித் (104 ரன், 64 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) பாய்ந்து விழுந்து அடித்தபோது பந்து பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறியது.
ஓராண்டுக்கு பிறகு பவுலிங் செய்த ஹர்திக் பாண்ட்யா சில வேகம் குறைந்த பந்துகளை சாதுர்யமாக வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கொஞ்சம் தடுமாற வைத்தார். ஆனால் மற்ற பவுலர்களின் பந்து வீச்சு கொஞ்சம் கூட எடுபடவில்லை. சுமித்துக்கு பிறகு வந்த மேக்ஸ்வெல்லும் ருத்ரதாண்டவம் ஆட இந்திய பவுலர்கள் விழிபிதுங்கிப் போனார்கள். பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை. லபுஸ்சேன் 44 ரன்னில் இருந்த போது கொடுத்த மிக எளிதான கேட்ச்சை ஜடேஜா கோட்டை விட்டார். இதே போல் மேக்ஸ்வெல்லுக்கு 48 ரன்னில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி வீணடித்தார். லபுஸ்சேன் தனது பங்குக்கு 70 ரன்கள் (61 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். மேக்ஸ்வெல் கடைசி ஓவரில் இரு அட்டகாசமான சிக்சருடன் இன்னிங்சை நிறைவு செய்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 389 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 114 ரன்கள் திரட்டினர். மேக்ஸ்வெல் 63 ரன்களுடனும் (29 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஹென்ரிக்ஸ் 2 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ‘மெகா’ இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் (30 ரன்), மயங்க் அகர்வால்(28 ரன்) ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். இதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். ஆனால் ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஒருவித நெருக்கடிக்கு மத்தியிலேயே விளையாட வேண்டி இருந்தது. இது ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சாதகமாக அமைந்தது. ஸ்கோர் 153 ரன்களை எட்டிய போது ஸ்ரேயாஸ் அய்யர் (38 ரன்), ஹென்ரிக்சின் ‘ஷாட்பிட்ச்’ பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் வந்தார்.
இன்னொரு பக்கம் 59-வது அரைசதத்தை கடந்து நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட் கோலி (89 ரன், 87 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) முக்கியமான கட்டத்தில் (34.5 ஓவர்) விக்கெட்டை பறிகொடுத்தார். முதலாவது ஆட்டத்தை போன்றே ஹேசில்வுட் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை அடித்த போது அதை ‘ஷாட்மிட் விக்கெட்’ திசையில் நின்ற ஹென்ரிக்ஸ் பாய்ந்து பிரமாதமாக கேட்ச் செய்தார். அத்துடன் இந்தியாவின் நம்பிக்கை சிதைந்து போனது. அடுத்து வந்த வீரர்கள் சில சிக்சர், பவுண்டரிகள் விரட்டினாலும் அது இந்தியாவின் தோல்வி வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. லோகேஷ் ராகுல் 76 ரன்களிலும் (66 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களிலும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்கள்.
50 ஓவர் முடிவில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 338 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. முன்னதாக முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. ஸ்டீவன் சுமித் மீண்டும் ஆட்டநாயகன் விருது பெற்றார். இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கான்பெர்ராவில் வருகிற 2-ந்தேதி நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்
திங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST)

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST)

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST)

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST)

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST)

மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST)
