» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சி.எஸ்.கே., கேப்டனாக 100வது வெற்றி: தோனி மகிழ்ச்சி

திங்கள் 21, செப்டம்பர் 2020 12:06:11 PM (IST)

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் பெற்ற வெற்றி அனுபவ வீரர்களால் சாத்தியமானது என்று சென்னை அணியின் கேப்டன் தோனி கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி ருசித்த 100-வது வெற்றி இதுவாகும். இந்த உற்சாகத்தோடு தோனி கூறியதாவது: நாம் போதுமான பயிற்சி எடுத்திருக்கலாம். ஆனால் களம் இறங்கும் போது ஆடுகளத்தன்மை மற்றும் சூழ்நிலையை நன்கு கணித்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். இந்த ஆடுகளத்தில் எந்த மாதிரி பந்து வீசினால் நன்றாக இருக்கும் என்பதை கணிக்க நேரம் எடுத்துக் கொண்டோம். 

இந்த ஆட்டத்தின் மூலம் நிறைய சாதகமான அம்சங்களை எடுத்துக் கொள்ள முடியும். ஆனாலும் இன்னும் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. 2-வது பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு ஏற்படும் வரை பந்து ஸ்விங் ஆகும் என்பதை உணர வேண்டும். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் தக்க வைத்திருந்தால் நமது கை ஓங்கும். இவை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்.

பிளிஸ்சிஸ் உடன் அம்பத்தி ராயுடுவின் பார்ட்னர்ஷிப் அருமை. எங்கள் அணியில் பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. இத்தகைய நெருக்கடியான சூழலில் அனுபவம் எங்களுக்கு கைகொடுத்திருக்கிறது. அது பற்றி தான் ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். நிறைய போட்டிகளில் விளையாடினால் தான் அனுபவம் கிடைக்கும். 300 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எல்லோருக்கும் பெரிய கனவு. எப்போதும் களம் இறங்கும்போது இளமையும், அனுபவமும் கலந்த அணியாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

களத்திலும், வெளியிலும் இளம் வீரர்களை அனுபவ வீரர்கள் வழிநடத்த வேண்டும். பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள மூத்த வீரர்களுடன் 60-70 நாட்கள் பழகும் வாய்ப்பு இளம் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரனை முன்கூட்டியே களம் இறக்கியது குறித்து கேட்கிறீர்கள். அந்த சமயம் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கொஞ்சம் அச்சுறுத்தும் முயற்சியாக ஜடேஜா, கர்ரனை முன்வரிசையில் பயன்படுத்தினோம். இவர்கள் ஒன்றிரண்டு சிக்சர் அடித்தால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் பணி எளிதாகி விடும். இது உளவியல் ரீதியான ஒரு யுக்தி. அதற்கு பலனும் கிட்டியது. இவ்வாறு தோனி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory