» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்

சனி 18, ஏப்ரல் 2020 11:58:34 AM (IST)

இந்தியாவில் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதாலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதாலும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் ஐ.பி.எல். தொடரை நடத்த வாய்ப்பில்லை. தற்போதைய அசாதாரண சூழல் சீரானதும் செப்டம்பர்-அக்டோபர் அல்லது அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்தும் யோசனையில் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. 

ஆனால் அந்த சமயத்தில் சில சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் வருவதால் இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டி நடப்பது சந்தேகம் தான். இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியை தங்கள் நாட்டில் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. இலங்கையில் கரோனாவின் தாக்கம் மிகவும் குறைவாக உள்ளது. அங்கு இதுவரை 238 பேர் மட்டுமே இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விரைவில் நிலைமை சரியாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா கூறுகையில், ‘ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், அணிகளின் உரிமையாளர்களுக்கும் ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும். இன்னொரு நாட்டில் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் இந்த நஷ்டத்தை ஓரளவு குறைக்க முடியும். அவர்கள் இலங்கை மண்ணில் விளையாடினால் டி.வி. மூலம் இந்திய ரசிகர்கள் போட்டியை எளிதில் கண்டுகளிக்க முடியும். நேரப் பிரச்சினையும் இருக்காது. 

இதற்கு முன்பு ஐ.பி.எல். போட்டியை வேறு நாட்டில் நடத்திய அனுபவம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உண்டு. 2009-ம் ஆண்டு இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்ததால், 2-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. எங்களது கோரிக்கை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம். இலங்கையில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உள்ளிட்ட எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுப்போம். எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும்’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory