» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை டி-20 கிரிக்கெட் தகுதி சுற்று தள்ளிவைப்பு: ஐசிசி அறிவிப்பு

வெள்ளி 27, மார்ச் 2020 12:27:50 PM (IST)

2021-ம் ஆண்டு டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தள்ளிவைக்கப்படுவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

16 அணிகள் பங்கேற்கும் 7-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா அடுத்த ஆண்டு (2021) இந்தியாவில் அரங்கேறுகிறது. இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். 

8-வது உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றின் ஒரு பகுதி ஆட்டங்கள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடக்க இருந்தது. கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போவதால் இந்த தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது.

போட்டிகளுக் கான ஐ.சி.சி. நிர்வாகி கிறிஸ் டெட்லி கூறுகையில், ‘உலகளாவிய கரோனா பாதிப்பு மற்றும் ஒவ்வொரு நாடுகளும் விதித்துள்ள கட்டுப்பாடுகள் இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து ஐ.சி.சி. தள்ளிவைப்பு முடிவை எடுத்துள்ளது. எல்லாவற்றையும் விட வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் உடல் ஆரோக்கியமும், பாதுகாப்புமே எங்களுக்கு முதன்மையானது’ என்றார்.

ஐ.சி.சி.யின் அறிவிப்பின்படி ஏப்ரல் 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை குவைத்தில் நடக்க இருந்த ஆசிய மண்டலத்திற்கான தகுதி சுற்று (ஏ பிரிவு), ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் நடக்க இருந்த ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று, ஸ்பெயினில் மே 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடக்க இருந்த ஐரோப்பிய மண்டலத்திற்கான (ஏ பிரிவு) தகுதி சுற்று மற்றும் மலேசியா, பின்லாந்து ஆகிய நாடுகளில் நடக்க இருந்த போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமையை ஆராய்ந்து தகுதி சுற்று போட்டி எப்போது நடத்தப்படும் என்பதை ஐ.சி.சி. அறிவிக்கும். மேலும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஸ்காட்லாந்து, உகாண்டாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள உலக கோப்பை கிரிக்கெட் லீக், உலக கோப்பை சேலஞ்ச் லீக் ஆகிய போட்டிகள் தங்களது கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும், சூழ்நிலைக்குத் தக்கப்படி அந்த போட்டி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் ஐ.சி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory