» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி!

வெள்ளி 21, பிப்ரவரி 2020 5:00:42 PM (IST)

ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது .

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் இன்று தொடங்கியுள்ள மகளிா் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. சிட்னியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் 4 ஓவர்களில் 40 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு இந்திய அணி தடுமாற ஆரம்பித்தது. மந்தனா, 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 வயது ஷஃபாலி வர்மா அடுத்த ஓவரில் 29 ரன்களுடன் வெளியேறினார். இதுபோதாது என்று அடுத்த ஓவரில் கெளர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, நிலைமை மாறிப்போனது. 

10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது இந்தியா. அடுத்த ஆறு ஓவர்களில் இந்திய அணி ஒரு பவுண்டரி மட்டும் அடித்தது. இதனால் இந்திய அணி எப்படியும் 150 ரன்களாவது தாண்டும் என்கிற எதிர்பார்ப்பு வீணானது. ரோட்ரிகஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி மொத்தமாக 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்ததால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் போனது. தீப்தி சர்மா, 46 பந்துகளில் 49 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.

5 ஓவர்கள் வரை இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களைப் பிரிக்க முடியவில்லை. 6-வது ஓவரில் மூனியை 6 ரன்களில் வீழ்த்தினார் பாண்டே. ஆஸி. அணி முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்தது. அலிஸ்ஸா ஹீலி மறுபுறம் விரைவாக ரன்கள் எடுத்தார். லேனிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ஹீலியை 51 ரன்களில் வீழ்த்தினார் பூணம் யாதவ். இவருடைய பந்துவீச்சு தான் இந்திய அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தது. 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. 

தனது 2-வது ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் பூணம் யாதவ். அடுத்தடுத்த பந்துகளில் ஹேன்ஸ், பெர்ரியை ஆட்டமிழக்க செய்தார். விக்கெட் கீப்பர் கொஞ்சம் முயன்று கேட்ச் பிடித்திருந்தால் ஹாட்ரிக் கிடைத்திருக்கும். 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகு ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. தனது 3-வது ஓவரில் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார் பூணம் யாதவ். 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.  ஆஸ்திரேலிய அணி, 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி, 17 ரன்கள் வித்தியாசத்தில் டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றியடைந்துள்ளது. பூணம் யாதவ் 4 விக்கெட்டுகளும் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory