» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ரோஹித் சர்மா அதிரடி சதம், குல்தீப் யாதவ் ஹாட்ரிக்: வெஸ்ட் இன்டீஸை பந்தாடியது இந்தியா

வியாழன் 19, டிசம்பர் 2019 10:13:37 AM (IST)விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் சதம் அடித்தும், குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தும் அசத்தினர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி லோகேஷ் ராகுலும், ரோஹித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங்குக்கு சொர்க்கபுரி என்றாலும் இருவரும் சில ஓவர்கள் நிதானத்தை கடைபிடித்தனர். 

பிறகு காட்ரெல் ஓவரில் 2 பவுண்டரியும், ஹோல்டரின் பந்து வீச்சில் சிக்சரும் அடித்து அதிரடிக்கு லோகேஷ் ராகுல் அதிரடி ஆட்டத்தை துவக்கினார். தனது முதல் 30 பந்துகளில் 16 ரன் மட்டுமே எடுத்தார். போக போக இந்தியாவின் ரன்வேகம் அதிகரித்தது. வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த கூட்டணி 156 ரன்களை எட்டிய போது உடைந்திருக்க வேண்டியது. ரோஹித் சர்மா 70 ரன்னில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஹெட்மயர் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா 28-வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து லோகேஷ் ராகுல் தனது 3-வது சதத்தை எட்டினார்.

அணியின் ஸ்கோர் 227 ரன்களாக (37 ஓவர்) உயர்ந்த போது ராகுல் 102 ரன்களில் (104 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (0) சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். பொல்லார்ட் ஷாட்பிட்ச்சாக வேகத்தை குறைத்து வீசிய பந்தை கோலி அடித்த போது பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறிப் போனது. இதன் பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். செஞ்சுரிக்கு பிறகு ரோஹித் சர்மா ரன்மழை பொழிந்தார். 4-வது இரட்டை சதத்தை அடிக்கும் சந்தர்ப்பம் ரோஹித் சர்மாவுக்கு கனிந்திருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக 44-வது ஓவரில் அவுட் ஆகி விட்டார். ரோஹித் சர்மா 159 ரன்களில் (138 பந்து, 17 பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார்.

இதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யருடன், இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஜோடி சேர்ந்து ருத்ர தாண்டவமாடினார். அல்ஜாரி ஜோசப்பின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்ட பண்ட், சல்யூட் மன்னன் காட்ரெலின் ஒரே ஒவரில் 2 சிக்சர், 3 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு குழுமியிருந்த 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களையும் குதூகலப்படுத்தினார். ஸ்ரேயாஸ் அய்யரும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தண்டிக்க தவறவில்லை. புல்டாசாக வீசிய சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேசின் ஓவரில் 4 சிக்சரும், ஒரு பவுண்டரியும் சாத்தியெடுத்தார்.

இவர்களின் அசாதாரணமான பேட்டிங்கால் 350 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் ஸ்கோர் அதையும் தாண்டிச் சென்றது. ரிஷாப் பண்ட் 16 பந்துகளில் 39 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), 6-வது அரைசதத்தை கடந்த ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் 53 ரன்களும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய வீரர்கள் 127 ரன்களை சேகரித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஹெட்மயர் (4 ரன்) 3-வது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரன்-அவுட்டில் வீழ்ந்தார். 86 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பும், நிகோலஸ் பூரனும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்தியாவின் பீல்டிங் மெச்சும்படி இல்லை. ஷாய் ஹோப்புக்கு ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஸ்லிப்பில் நின்ற ராகுல் கேட்ச் வாய்ப்பை வீணடித்தார். 

பூரன் 22 ரன்னில் இருந்த போது தூக்கியடித்த பந்தை தீபக் சாஹர் தவற விட்டார். இதன் காரணமாக இவர்கள் இருவரும் கொஞ்ச நேரம் இந்திய பந்து வீச்சை பின்னியெடுத்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. பூரன் 75 ரன்களில் (47 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆனார். கேப்டன் பொல்லார்ட் (0) தாக்குப்பிடிக்கவில்லை. ஷாய் ஹோப் (78 ரன், 85 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) உள்பட 3 வீரர்களை தனது சுழலில் தொடர்ச்சியாக காலி செய்து குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை படைத்து அமர்க்களப்படுத்தினார்.முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் 280 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 22-ந்தேதி கட்டாக்கில் நடக்கிறது.

இந்த ஆண்டில் 7 சதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய துணை கேப்டன் ரோஹித் சர்மா 17 பவுண்டரி, 5 சிக்சருடன் 159 ரன்கள் நொறுக்கி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் விவரம் வருமாறு:-

* ரோஹித் சர்மா இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 27 ஆட்டத்தில் விளையாடி 7 சதம் உள்பட 1,427 ரன்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். 2-வது இடத்தில் ஷாய் ஹோப்பும் (1,303 ரன்), 3-வது இடத்தில் விராட் கோலியும் (1,292 ரன்) உள்ளனர்.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இந்த ஆண்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சவுரவ் கங்குலி (2000-ம் ஆண்டில் 7 சதம்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (2016-ம் ஆண்டில் 7 சதம்) ஆகியோரை சமன் செய்துள்ளார். இந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் முதலிடம் வகிக்கிறார். அவர் 1998-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 சதங்களை சுவைத்திருந்தார்.

* நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா எடுத்த 159 ரன்களே, இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் இந்தியர் ஒருவரின் தனிநபர் அதிகபட்சமாகும். 2013-ம் ஆண்டில் இருந்து ரோஹித் சர்மாவின் ஸ்கோரே இந்தியாவின் தனிநபர் அதிகபட்சமாக நீடிக்கிறது. 2013-ம் ஆண்டில் 209 ரன், 2014-ம் ஆண்டில் 264 ரன், 2015-ல் 150 ரன், 2016-ல் 171* ரன், 2017-ல் 208*ரன், 2018-ல் 162 ரன் என்றவாறு தனிநபர் அதிகபட்சத்தை பதிவு செய்துள்ளார்.

* ஒரு போட்டியில் அதிக முறை 150 ரன்களை கடந்தவர்களில் ரோஹித் சர்மா முதலிடத்தில் (8 முறை) தொடருகிறார். ஆஸ்திரேலியாவின் வார்னர் 2-வது இடத்தில் (6 தடவை) உள்ளார்.

* ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டில் மட்டும் ரோஹித் சர்மா 77 சிக்சர்கள் கிளப்பியிருக்கிறார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் விரட்டிய தனது முந்தைய சாதனையை (2018-ம் ஆண்டில் 74 சிக்சர்) மாற்றி அமைத்திருக்கிறார்.

* ரோஹித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் திரட்டினர். ஒரு நாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு இந்திய ஜோடி 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 6-வது நிகழ்வாகும். இந்த வரிசையில் இந்தியாவின் 4-வது சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்துள்ளது.


2-வது முறையாக ஹாட்ரிக்: குல்தீப் சாதனை 

இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் 33-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை தொடர்ச்சியாக கபளகரம் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். அந்த ஓவரின் 4-வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் தூக்கியடித்த பந்தை எல்லைக்கோடு அருகே கோலி சூப்பராக கேட்ச் செய்து சிலிர்க்க வைத்தார். 5-வது பந்தில் ஜாசன் ஹோல்டர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். 6-வது பந்தில் அல்ஜாரி ஜோசப், ஸ்லிப் பகுதியில் நின்ற ஜாதவிடம் பிடிபட்டார்.

25 வயதான குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2017-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதிலும் 33-வது ஓவரில் தான் ஹாட்ரிக் நிகழ்ந்தது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை தன்வசப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், இலங்கையின் மலிங்கா, சமிந்தா வாஸ், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் ஒன்றுக்கு மேற்பட்ட ஹாட்ரிக் சாதனை படைத்தவர்கள் ஆவர். இந்த அரிய பட்டியலில் குல்தீப் யாதவ் இணைந்துள்ளார். இதில் மலிங்கா மட்டும் 3 முறை ஹாட்ரிக் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்களில் குல்தீப் யாதவை தவிர்த்து சேத்தன் ஷர்மா, கபில்தேவ், முகமது ஷமி தலா ஒரு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருப்பது நினைவு கூரத்தக்கது.

ஒரே ஓவரில் 31 ரன் எடுத்து இந்தியா சாதனை

வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரோஸ்டன் சேஸ் வீசிய ஆட்டத்தின் 47-வது ஓவரில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் அய்யர் 4 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டி துவம்சம் செய்தார். ரிஷாப் பண்ட் ஒரு ரன் எடுத்தார். மேலும் எக்ஸ்டிரா வகையில் 2 ரன் வந்தது. ஆக ஒரே ஓவரில் இந்தியாவுக்கு 31 ரன்கள் கிடைத்தது. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு ஓவரில் இந்தியா பெற்ற அதிகபட்ச ரன் இதுதான். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர்-அஜய் ஜடேஜா ஜோடி ஒரு ஓவரில் 28 ரன்கள் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது. அந்த 20 ஆண்டு கால சாதனை இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

இரண்டு கேப்டன்களும் டக் அவுட்

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி, தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து கோல்டன் டக் ஆனார். ஒரு நாள் போட்டியில் 13-வது முறையாக டக்-அவுட் ஆகியிருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் அவரது முதல் டக் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் 2 சதமும், 3 அரைசதமும் அடித்திருந்த கோலி முதல்முறையாக இங்கு சோடைபோயிருக்கிறார். இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்டும் முதல் பந்திலேயே கேட்ச் ஆகி கோல்டன் டக் ஆனார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory