» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டேவிட் வார்னர் சதம்: ஆஸியிடம் வீழ்ந்த பாகிஸ்தான்!

வியாழன் 13, ஜூன் 2019 5:33:04 PM (IST)உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 17ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 12) ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச்சும் டேவிட் வார்னரும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 23ஆவது ஓவரில் பிஞ்ச் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் பொறுப்புடன் ஆடிய வார்னர் சதமடித்தார். 111 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 107 ரன்களுக்கு வார்னர் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணித் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய முகமது அமீர் 10 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

308 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு மூன்றாவது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பக்கர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமல் பேட் கம்மின்ஸ் வேகத்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹம் மட்டும் சிறிது நேரம் தாக்குப் பிடித்து அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியதோடு சீரான இடைவெளிகளில் தங்களது விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினர்.

பாகிஸ்தான் அணி 45.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சதமடித்து அணியின் ரன் குவிப்புக்கு உதவிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory