» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

அங்கீகாரம் இல்லாத கட்டுமானங்கள் கட்ட தடை : ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு

வெள்ளி 28, ஜனவரி 2022 5:36:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத கட்டுமானங்கள் கட்டவும், பதிவு செய்யாத என்ஜினீயர்கள் கட்டிட வரைபடம் தயாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மறறும் கட்டிட விதிகள் 2019 வெளியிடப்பட்டுள்ள நிலையில் விதி 23 இன் படி அனைத்து கிராம ஊராட்சிப் பகுதிகளிலும் கிராம ஊராட்சியில் முறையான எழுத்துபூர்வமான அனுமதி பெறப்படாமல் புதிய கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது.

மேலும் புதிய கட்டுமானங்கள் கட்டுவதற்கு ஊராட்சியில் அனுமதி பெற பின்வரும் தொழில் வல்லுநர்கள் பதிவு செய்து கட்டிட வரைபடங்களில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

1. பதிவு பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் (Architects)

2. பொறியாளர்கள் (Engineers)

3. கட்டமைப்பு பொறியாளர்கள் (Structural Engineers)

4. கட்டிட அபிவிருத்தியாளர்கள் (Construction Engineers)

5. தரத் தணிக்கையாளர்கள் (Quality Auditors)

6. நகரமைப்பு வல்லுநர் (Town Planner)

7. அபிவிருத்தியாளர் (Developers)

மேற்குறிப்பிட்டுள்ள தொழில் முறை சார்ந்த வல்லுநர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் அல்லது மாநகராட்சியில் பதிவு செய்திருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளருக்கு (ஊரக வளர்ச்சி) விண்ணப்பித்து அவரின் அனுமதியினைத் தொடர்ந்து உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் தொழில் முறை சார்ந்த வல்லுநர்கள் பெயர் விவரங்கள் பதிவு செய்யப்படும்.

இவ்வாறு மாவட்ட அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரம் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்திற்கு தெரிவிக்கப்படும். இவ்வகையில் பதிவு பெற்ற தொழில்முறை வல்லுநர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.5ஆயிரம் பதிவு கட்டணமாக செலுத்தி ஆணை பெற்று பணிகளை மேற்கொள்ளலாம். எனினும் தொழில்முறை வல்லுநர்கள் ஒரு ஒன்றியத்தின் பதிவைப் பயன்படுத்தி அடுத்த ஒன்றியத்தில் பணிகளை மேற்கொள்ள இயலாது.

கிராம ஊராட்சிப் பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளுக்கு வரப்பெறும் விண்ணப்பங்களில் மேற்குறிப்பிட்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ள தொழில்முறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்ட கட்டிட வரைபடங்களை மட்டுமே பரிசீலனை செய்ய அனைத்து கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. கிராம ஊராட்சியிலிருந்து முறையான எழுத்துபூர்வமான அனுமதி பெறப்படாமல் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய வீட்டுவரி தீர்வை வசூலிக்கப்பட மாட்டாது என்ற விவரம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

விதிமுறைகளுக்கு மாறாக கட்டிட வரைபடங்களுக்கு அனுமதியளித்தாலோ, முறையான அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு புதிய வீட்டுவரி தீர்வை வழங்கினாலோ சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அரசுக்கும் ஊராட்சிக்கும் ஏற்படும் நிதியிழப்புகள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சித் தலைவரிடமிருந்து வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

ஆமாப்பாFeb 12, 2022 - 06:02:37 PM | Posted IP 108.1*****

பாதாள சாக்கடைகள் கால்வாய்கள் எல்லாம் சரியில்லை அதுல தடை பண்ணுங்க

TAYYAATHURAlFeb 10, 2022 - 11:00:26 PM | Posted IP 108.1*****

அப்படி இசைவு முறைப்படிப் பெறாமல் கட்டும் கட்டடங்கள் நீண்ட காலங்கடந்து இடிக்கப்படுவது தவிர்த்து உடனடியாய் இடித்துவிடலாமன்றா என நான் நினைக்கின்றேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பதிவாகவில்லை

Sponsored Ads



Thoothukudi Business Directory