» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ஆய்வு!
சனி 8, ஆகஸ்ட் 2026 10:28:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நெல்லை மண்டலச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பின், கோவில் சிலைகளைப் பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் கோவில்களிலும் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.
அதன்படி, நெல்லை மண்டலச் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா ராணி தலைமையில், உதவி ஆய்வாளர் திருவளவன் மற்றும் தலைமைக் காவலர் செல்லப்பா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காலை தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முதற்கட்டமாக, கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்களிடம் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் மற்றும் அதன் விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கோவிலில் மொத்தம் 34 உலோகச் சிலைகள் இருப்பதும், அதற்கான முறையான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அச்சிலைகள் சேதமின்றிப் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், கடந்த 2002-ஆம் ஆண்டு மூக்குப் பகுதியில் சேதமடைந்ததால் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் சிலையை ஆய்வாளர் வனிதா ராணி பார்வையிட்டுச் சோதனை செய்தார். அச்சிலை எதிர்பாராத விதமாகக் கீழே தவறி விழுந்ததால் சேதமடைந்தது சோதனையில் தெரியவந்தது. இதன்பின், கோவிலில் உள்ள அனைத்துக் கற்சிலைகளையும் ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் சேதமன்றிச் சரியாக இருப்பது கண்டறியப்பட்டது.
ஆய்வின் ஒரு பகுதியாக, கோவிலுக்கு வருகை தந்த சுமார் 25 பக்தர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். "தினமும் கோவிலுக்கு வரும் உங்களுக்குச் சிலைகளில் ஏதேனும் மாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டிருப்பது தெரியுமா?" எனக் கேட்டறிந்தனர். அதற்குப் பக்தர்கள், "நாங்கள் பல வருடங்களாகப் பார்த்து வரும் அதே சிலைகள்தான் எந்த மாற்றமுமின்றி உள்ளன" எனத் தெரிவித்தனர்.
நேற்று காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நீண்ட இந்த விரிவான ஆய்வின் முடிவில், கோவிலில் உள்ள அனைத்துச் சிலைகளும் அதற்கான ஆவணங்களும் சரியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிவன் கோவிலில் நாள் முழுவதும் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணி பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 9:22:58 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் : நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:43:26 PM (IST)

மூதாட்டியைக் கட்டிப்போட்டு 44 கிராம் நகை பறிப்பு : பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 2 பேர் கைது!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:14:03 PM (IST)

பெண்ணைக் கொன்று வேக வைத்த கொடூர தம்பதி கைது: விசாரணையில் பகீர் தகவல்கள்!
சனி 29, ஆகஸ்ட் 2026 4:39:35 PM (IST)

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துக: தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:50:02 AM (IST)

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:34:39 AM (IST)


