» செய்திகள் » தமிழகம்

மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா வழக்கு

சனி 28, ஜனவரி 2012 11:17:47 AM (IST)

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனு விவரம்: சென்னை சித்தரஞ்சன் சாலையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் தனது பக்கத்து வீட்டுக்காரரான மு.க. ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி உள்ளிட்டோர் தனது இடத்தை கட்டாயப்படுத்தி வாங்கிக் கொண்டதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2.12.2011 அன்று கூடுதல் டி.ஜி.பி.யைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கொடநாடு மலைப் பகுதியில் பெருமளவு நிலத்தை முதல்வர் ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ளார்.

இதேபோல சிறுதாவூரில் தலித் மக்களுக்கு சொந்தமான பெருமளவு நிலத்தை முதல்வர் ஜெயலலிதா ஆக்கிரமித்துள்ளார். இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கெனவே புகார் அளித்துள்ளனர். எனினும், இந்த நிலப்பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மீது போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் அந்த மனுவில் கூறியுள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக அதே குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், செல்வாக்குக்கும் இழுக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வேண்டுமென்றே இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிய மு.க.ஸ்டாலின் மற்றும் அவர் கூறியதைப் பிரசுரித்த மாலை நாளிதழ் ஒன்றின் நிர்வாகிகள் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வழக்குரைஞர் ஜெகன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory