» செய்திகள் » தமிழகம்
புதிய அணை கட்ட கேரள அரசு சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்கவில்லை: ஜெயந்தி நடராஜன் பேட்டி
வெள்ளி 27, ஜனவரி 2012 3:19:16 PM (IST)
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கவில்லை என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.
தேசிய பல்லுயிரினம் ஆணையம் சார்பாக 2 நாள் மாநாடு சென்னை தியாகராய நகர் ரெசிடன்சி டவர் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தலைமை தாங்கி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த தலைவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை செயலாளர் சேட்டர்ஜி, திட்ட கமிஷன் உறுப்பினர் கஸ்தூரிரங்கன், பல்லுயிரினம் ஆணைய தலைவர் பாலகிருஷ்ணா பசுபதி, செயலாளர் அலெக்சாண்டர் ரெட்டி, பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தேசிய பல்லுயிரினம் ஆணைய மாநாட்டில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்று பல்லுயிரினம் அழிவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மரம், செடி, தாவரங்கள், தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
எந்த அளவுக்கு பல்லுயிரினங்களை பாதுகாக்க முடியும் என்பது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. 10 ஆயிரம் மில்லியன் பல்லுயிரினங்கள் இருந்துள்ளன. அவற்றில் ஒரு சதவீதம் பல்லுயிரினங்கள் மட்டுமே இருக்கின்றன. இவை அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இந்த ஒரு சதவீதம் அழிந்து விட்டால் எல்லாமே அழிந்து விடும். இந்த அழிவுக்கு ஒரே காரணம் மனித இனம்தான்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்லுயிரினங்கள் அழிவதை நாம் தடுக்க வேண்டும். முறையான திட்டங்கள் வகுத்து அவற்றை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. பல்லுயிரினத்தால் ஏற்படும் நன்மைகளை பகிர்ந்து கொள்ள சட்டங்கள் உள்ளன. இதுபற்றி விவாதித்து வருகிறோம்.
பொதுமக்கள் வாகனங்களை குறைவாகப் பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து கிடைக்கும் கழிவுகளை வீணாக்கக்கூடாது. அதை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
பல்லுயிரினங்கள் நமக்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்க அடிப்படை மூல காரணமாக இருக்கிறது. ஆஸ்பிரின், இதய நோய்க்கான மருந்துகள் போன்றவை செடிகள் மூலம் கிடைக்கிறது.
எனவே பல்லுயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும். இதற்காக நாடு முழுவதும் 32 ஆயிரத்து 500 குழுக்களை அமைத்துள்ளோம். மாவட்டம் மற்றும் கிராம அளவில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பங்களிப்பும் இதில் உள்ளது.
பல்லுயிரினம் பற்றிய சர்வதேச மாநாடு ஐதராபாத்தில் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். 192 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டை மத்திய அரசு நடத்துகிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். பல்லுயிரினங்களை பாதுகாக்க 2003-ம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. பல்லுயிரினங்களை பாதுகாப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண் டும் என்பதே இந்த ஆணையத்தின் நோக்கமாகும்.
கேள்வி:- புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் துறைக்கு கடிதம் வந்துள்ளதா?
பதில்:- இதுகுறித்து அரசிடம் இருந்து கடிதம் வந்தால் முறையாக பரிசீலிப்போம்.
கேள்வி:- சாலையோரம் உள்ள மரங்களை அழிக்கிறார்களே?
பதில்:- மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் சாலையை விரிவுபடுத்த முடியாது. 4 வழிப்பாதையை 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்வதற்கும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். தேவை இல்லாமல் அனுமதி தர மாட்டோம். சாலை யோரத்தில் உள்ள மரத்தின் அளவு என்ன? அடர்த்தி, உயரம் என்ன? என்பதைப் பார்த்து கவனமாகச் செயல்படுகிறோம்.
கேள்வி:- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதா?
பதில்:- இதுபற்றி பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டது. இதுவரை கேரளா அரசு அனுமதி கேட்கவில்லை என்றுதான் பாராளுமன்றத்தில் நான் கூறி இருக்கிறேன்.
கேள்வி:- பிளாஸ்டிக் கழிவினால் சுற்றுச்சூழல் அதிகமாகப் பாதிக்கப்படுகிறதே?
பதில்:- பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் இயக்கமாக கொண்டு வரவேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை சாலை போடுவதற்கு பயன்படுத்தினால் தரமாக இருக்கும். இதுபற்றி தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 4½ லட்சம் ரேஷன் கார்டுகள் புதுப்பிப்பு
வியாழன் 23, பிப்ரவரி 2012 8:04:27 AM (IST)

வங்கி கொள்ளையர் 5 பேர் சுட்டுக்கொலை: நள்ளிரவுசோதனையில் போலீசார் அதிரடி!!
வியாழன் 23, பிப்ரவரி 2012 7:42:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் அதிகாரி நியமனம்!
புதன் 22, பிப்ரவரி 2012 6:47:30 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட சர்ச்சுகளில் இன்று சிறப்பு பிரார்த்தனை
புதன் 22, பிப்ரவரி 2012 6:06:06 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க ஒத்துழைப்பு: போராட்ட குழுவினருக்கு சரத்குமார் வேண்டுகோள்
புதன் 22, பிப்ரவரி 2012 5:22:13 PM (IST)

போட்டியிட மனுவை தாக்கல் செய்து டெபாசிட் தொகையை கட்டாத வேட்பாளர்
புதன் 22, பிப்ரவரி 2012 5:20:51 PM (IST)


