» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம்

செவ்வாய் 2, டிசம்பர் 2025 11:08:16 AM (IST)

திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.இதேபோல், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள மதுரை சோலை கண்ணன், திருவண்ணாமலை அரங்கநாதன் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். மக்களுக்கு தெரியும் மதுரை கனகவேல் பாண்டியன், 'பாரம்பரிய வழக்கப்படி உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.ராமரவிக்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவு மனுதாரர்கள் மற்றும் சோலைகண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், வெங்கடேஷ், குமரகுரு, நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா, பொன்னுரங்கன் ஆகியோர் வாதம்: தீபத்துாணில் தீபம் ஏற்றினால் தான் சுற்றிலும் உள்ள ஊர்களை சேர்ந்த மக்களுக்கு தெரியவரும். உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றினால் மக்களுக்கு தெரியாது. தீபத்துாணில் ஏற்றினால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. பிற மதத்தினர் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

தமிழக அரசு, அறநிலையத்துறை தரப்பில் தான் அனுமானத்தின் அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது. தர்கா எல்லை சுற்றுச்சுவரிலிருந்து தீபத்துாண் 63.20 மீ., துாரத்தில் அமைந்து உள்ளது.
அரசு தரப்பு வாதம்: கடந்த 1920 முதல் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 105 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையை தற்போது மாற்ற முடியாது.

மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என, மனுதாரர் கோருவதற்கு ஆதாரம் தாக்கல் செய்யவில்லை. பிரச்னையை உருவாக்கும் வகையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியம் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக கோவில் செயல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில், தீபத்துாணில் தான் ஏற்ற வேண்டும் என குறிப்பிடவில்லை. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மட்டுமே குறிப்பிட்டுஉள்ளார்.

பாரம்பரியமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றலாம் என, உயர் நீதிமன்றம் 1994ல் உத்தரவிட்டுள்ளது.மனுதாரரின் மனுவை கோவில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து அறநிலையத்துறை இணை கமிஷனர் மற்றும் கமிஷனரிடம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்தது தவறு.

வக்ப் வாரிய தரப்பு வாதம்: சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். ராம ரவிக்குமாரின் மனு நிலைக்கத்தக்கதல்ல. ஆதாரத்தை அவர் தாக்கல் செய்யவில்லை.கோவில் நிர்வாகத்திற்கு வக்ப் வாரியம் ஒத்துழைப்பு அளிக்க தயார். ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால் தான் தீர்வு கிடைக்கும்.

தர்கா நிர்வாகம் தரப்பு வாதம்: தர்கா எல்லைக்குள் தீபத்துாண் உள்ளது. அங்கு தீபம் ஏற்ற முடியாது. வழக்கம்போல் மாற்று இடத்தில் தீபம் ஏற்றுவதில் ஆட்சேபனை இல்லை. ஏற்கனவே இரு தரப்பிலும் ஒப்புக் கொண்டபடி ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால் தான் தீர்வு கிடைக்கும்.

அரங்கநாதன் தரப்பு: கோவில் கருவறைக்கு மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என, கோவிலின் மூத்த ராஜபட்டர் தெரிவித்துள்ளார். அவர் அதில் நிபுணத்துவம் பெற்றவர்.உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ராம ரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனுக்கள் அனுமதிக்கப்படுகிறது. கனகவேல் பாண்டியன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டு முதல் தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory