» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக அமைச்சரவை 5-வது முறையாக மாற்றம்: 4 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
திங்கள் 30, செப்டம்பர் 2024 9:16:56 AM (IST)
தமிழக அமைச்சரவை 5-வது முறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி, கோவி.செழியன், நாசர் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனைத்துக்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. ஆளும் தி.மு.க., ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முனைப்புக்காட்டி வருகிறது. இதற்காக கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அனைத்து பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளை அள்ளியது போல சட்டமன்றத்தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, துணை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி வந்தனர்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் அமெரிக்கா சென்று திரும்பியதும் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். எனவே அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என பேச்சு எழுந்தது.
இதற்கிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அமைச்சரவை மாற்றம் நேற்று முன்தினம் அரங்கேறியது. அதன்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் செந்தில்பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகிய 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். மேலும் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம்தென்னரசு, மெய்யநாதன், கயல்விழி, மதிவேந்தன், ராஜகண்ணப்பன் ஆகியோரின் இலாகாக்களை மாற்றம் செய்தும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து ராஜேந்திரன், செந்தில்பாலாஜி, கோவி.செழியன் மற்றும் ஆவடி நாசர் ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.
பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது. விழாவில், சபாநாயகர் அப்பாவு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், மேயர் பிரியா, தலைமைச்செயலாளர் நா.முருகானந்தம், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ., விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்-அமைச்சரின் மனைவி கிருத்திகா உதயநிதி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக அரசு நெறிமுறைப்படி அழைப்பிதழ் அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதற்கிடையே புதிதாக பதவி ஏற்றுள்ள 4 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது.
முதல்-அமைச்சரின் பரிந்துரையின் பேரில், கவர்னர் ஆர்.என்.ரவி, புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் பதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அமைச்சர்கள் இலாகா மாற்றம்
இதுதவிர முதல்-அமைச்சரின் பரிந்துரையின்படி, அமைச்சர்கள் பொன்முடி வனத்துறை அமைச்சராகவும், தங்கம் தென்னரசு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராகவும், ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும், மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், டாக்டர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராகவும் மாற்றம் செய்யப்பட்டு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராகவும், அந்த துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டனர். அடுத்த சில மாதங்களில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி பதவியேற்றார். அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், மெய்யநாதன், ராமச்சந்திரன், மதிவேந்தன் ஆகியோர் துறைகள் மாற்றப்பட்டன.
தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோரின் இலாகா மாற்றப்பட்டன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில்பாலாஜி கைதானதும், அவர் வசமிருந்த மின்சாரத் துறை தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை முத்துசாமியிடமும் வழங்கப்பட்டன. தற்போது 5-வது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேற்று சென்று தனது பணியை தொடங்கினார். ஏற்கனவே அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தனது பணிகளுக்கான கோப்புகளை பார்வையிட்டு பணிகளை தொடங்கினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.