» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு : பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம்!

சனி 4, பிப்ரவரி 2023 4:56:52 PM (IST)

தென்காசி மாவட்ட ஆட்சியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன், அவருக்கு பின்னர் கோபால சுந்தரராஜ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்சியராக நியமிக்கப்பட்டு, நான்காவது ஆட்சியராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆகாஷ் நியமிக்கப்பட்டார்.

புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்து 4-வது ஆ்ண்டில் அடியெடுத்து வைத்து சில மாதங்களே ஆகின்றன. ஆனால் தென்காசி மாவட்டத்துக்கு 5-வது ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் இடமாற்றம் செய்யப்பட்டு தொழிலாளர் நலத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலர் டி.ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் இடமாற்றத்துக்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஆகாஷ், குற்றாலத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் சாரல் விழாவை சிறப்பாக நடத்தினார். அத்துடன், புத்தகத் திருவிழா, உணவுத் திருவிழாவையும் நடத்தி, பொதுமக்களிடம் பாராட்டை பெற்றார்.

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள செயற்கை அருவிகளால் விவசாயம், இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து, ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக வடகரை பகுதியில் உள்ள சில செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து தனியாரால் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சமீபத்தில் கிராம உதவியாளர்கள் தேர்வை நேர்மையான முறையில் நடத்தி, ஆளுங்கட்சியினரின் தலையீடுகளை கண்டுகொள்ளாமல் தகுதி வாய்ந்தவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். பணம் எதுவும் கொடுக்காமல் பணி நியமனம் கிடைக்கப் பெற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கச் செய்தார். மேலும், அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அவற்றை வேலியிட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் தன்னை நேரில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கவும் வழிவகை செய்தார். ஆட்சியர் ஆகாஷின் பல்வேறு நடவடிக்கைகள் பலதரப்பட்ட மக்களிடமும் பாராட்டை பெற்ற நிலையில், அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஊத்துமலையில் விவசாயிகள் திரண்டு ஆட்சியர் இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த விவசாயிகள் ஆட்சியர் இடமாற்றத்துக்கு எதிரான போஸ்டர்களை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆட்சியர் ஆகாஷ் இடமாறுதல் உத்தரவை அரசு ரத்து செய்து, மேலும் சில ஆண்டுகள் தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.


மக்கள் கருத்து

விடியுமா ?Feb 5, 2023 - 02:47:26 PM | Posted IP 162.1*****

மக்களுக்காக நேர்மையாக பணியாற்றும் அரசு அதிகாரிகளை மாற்றுவது இப்போது உள்ள ஆளும் கட்சி பல ஆண்டுகளாக செய்து வருகிறது, பிறகு எப்படி மக்கள் நலத்திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றமுடியம்....?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory