» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகைகளை விற்று உல்லாச வாழ்க்கை!: 4பேரை திருமணம் செய்த கல்யாண ராணி கைது!

சனி 3, டிசம்பர் 2022 10:36:16 AM (IST)

நான்கு நபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணையும், அவரது இரண்டாவது கணவரையும், சென்னை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன், (25). ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, உடன் பணிபுரிந்த அபிநயா, 28, என்பவரை காதலித்தார். அபிநயா, 'நான் ஒரு அனாதை' என கூறியதால், நடராஜன், தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், ஆக., 29ல், தாம்பரம் ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில், அபிநயாவை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், அக்., 19ல், 15 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாயுடன் அபிநயா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், அபிநயாவின் 'ஆதார்' கார்டை வைத்து சோதனை செய்ததில், அந்த பெயரில், 32 சிம் கார்டுகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணைக்கு பின், சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில், ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த அபிநயாவை, நவ., 30ம் தேதி, போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நான்கு பேரை திருமணம் செய்து நகை, பணத்தை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.

இது குறித்து, போலீசார் கூறியதாவது: மதுரையைச் சேர்ந்த அபிநயா, 10ம் வகுப்பு படித்துள்ளார். 2011ல் மன்னார்குடியைச் சேர்ந்த விஜய் என்பவருடன், முறைப்படி அபிநயாவுக்கு திருமணம் நடந்தது. அவருடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த அபிநயா, 2013ல் செந்தில்குமார் என்பவரை, இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

பின், செந்தில்குமாரை பிரிந்து, 2020ல் ஆட்டோ ஓட்டுனரான பன்னீர்செல்வம் என்பவரை திருமணம் செய்தார். அவருடன், 10 நாட்கள் மட்டுமே வாழ்ந்த அபிநயா, நான்காவதாக, தாம்பரத்தைச் சேர்ந்த நடராஜனை திருமணம் செய்து, ஒன்றரை மாதங்கள் மட்டுமே வாழ்ந்து, நகை, பணத்துடன் தலைமறைவானார்.

பலரிடம் ஏமாற்றிய நகைகளை, இரண்டாவது கணவர் செந்தில்குமாருடன் சேர்ந்து, மதுரையில் தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, இருவரும் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர். சிலருடன் திருமணம் செய்யாமலும், அபிநயா வாழ்ந்துள்ளார். அபிநயா மற்றும் செந்தில்குமாரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து 3 சவரன் நகை, 74 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory