» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக இளைஞர்கள் வாய்ப்பை பயன்படுத்தினால் வெளிமாநிலத்தவர் வருகை குறையும்: சரத்குமார்

வியாழன் 1, டிசம்பர் 2022 3:16:56 PM (IST)

தமிழக இளைஞர்கள் கிடைக்கப்பெறும் வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்கினால், வெளிமாநிலத்தவர் வருகை குறையும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மக்கள் தொகை அழுத்தம் காரணமாகவும், பொருளாதார நடவடிக்கைகளாலும் பட்டப்படிப்பு முடித்து வெளிவரும் இளைஞர்கள், இளம்பெண்கள் இன்று பெருமளவில் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்களிலும்,  தனியார் நிறுவனங்களிலும் வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, வெளிமாநிலத்தவர்க்கு வாய்ப்புகள் அதிகரிப்பதாக தமிழக மக்கள் உணர்கிறார்கள். 

தமிழகத்திற்கு வெளிமாநிலத்தவர்  வருகை தினசரி அதிகரித்துக் கொண்டே செல்வது கண்கூடு. உணவகங்கள் தொழிற்சாலை, கட்டடபணி, சிறு, குறு, நடுத்தர வியாபாரங்கள், கடைகள், சரக்கு வாகனங்கள் இயக்கம் போன்ற போக்குவரத்து பணிகள் உள்ளிட்ட பெரும்பாலான பணிகளில்  வெளிமாநிலத்தவர் பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் தமிழர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேருகிறது. 

குறிப்பாக, இரயில்வே துறையிலும், கிராமப்புற பகுதிகளிலும் கடைநிலை ஊழியராக வெளிமாநிலத்தவர் நியமிக்கப்படுவதால் மொழி புரியாமல் தவறான தகவல் பரிமாற்றங்களும், நடைமுறை சிக்கல்களும், விபரீதங்களும் அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது.  

கல்வியறிவில் தன்னிறைவு அடைந்த தமிழக இளைஞர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கேற்ற பணியை தேடிக்கொண்டிருந்து, கால விரயம் செய்யாமல், தங்களுக்கு கிடைக்கப்பெறும் பணியில் முதலில் உங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி, தனிமனித வருவாய், பொருளாதாரத்தை உயர்த்தி கொண்டு, அதேசமயத்தில் உங்கள் கல்வித் தகுதி, விருப்பம், ஆர்வத்திற்கேற்ற பணியை தேடி அடைய முயற்சி செய்யுங்கள். 

உங்களது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காதபோது, போராடுங்கள், தவறில்லை. எத்தகைய தொழிலாக இருந்தாலும், தமது ஆற்றல் அறிந்து திறம்பட செயல்பட்டு சிறந்து விளங்குவோம் என்றால் உறுதியாக தொழில் முனைவோர்களாக உருவெடுத்து பிறருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சூழலையும் இன்றைய இளைஞர்களால் உருவாக்க முடியும். ஆனால் உழைப்பதற்கான எந்தவொரு  சிறு தளம் அமைந்தும் அதை பயன்படுத்தாமல் இருப்பது தவறு என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு சிறந்த முன்னுதாரணமாக ஹரியானா மாநிலத்தில் உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம், 2020 ஐ எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்ச மாதச் சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும் தனியார்த் துறை நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், கூட்டு நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனம், வியாபாரம் நிறுவனம் அல்லது ஏதேனும் சேவையை வழங்கும் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு இச்சட்டம் பொருந்துகிறது. இதனால் ஹரியானா மக்களுக்கு தனியார் துறையில் 75% இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று பணி உறுதி செய்யப்படுகிறது. 

இந்திய நாட்டில் எந்த மாநிலத்திலும் பணிபுரிவதற்கு அரசியலமைப்புச் சட்டப்படி வாய்ப்பிருக்கிறது என்றாலும், "தனக்கு மிஞ்சியது தான் தானமும், தர்மமும்" என்பது போன்ற ஹரியானாவின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தங்கள் மாநில மக்களுக்கு முன்னுரிமையும், அரசு, தனியார் துறை வேலை வாய்ப்புகளில் கூடுதல் இட ஒதுக்கீடும் வழங்கினால் தான் பொருளாதார அடிப்படையில் மாநிலத்தின்  வளர்ச்சியும், மாநில மக்களின் வளர்ச்சியும் மேம்படும். 

எனவே, தமிழக அரசும் தமிழக இளைஞர்கள், இளம்பெண்களின் கல்வித்தகுதி, துறை சார்ந்த நுண்ணறிவு, செயல்பாடு அடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து மத்திய, மாநில, தனியார் நிறுவனங்களிலும் 90 சதவிகிதம் வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் திட்டம் வகுத்து செயல்படுத்துமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். மேலும், பெருநிறுவனங்களும், அரசின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு, பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதனை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். 

இளைஞர்கள் முக்கியமாக வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்காமல், உங்களுக்கு நமது தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை பயன்படுத்தி, பணி செய்திடுங்கள். அதனால், வெளிமாநிலத்தவர் வருகையும், தமிழகத்தில் நடந்தேறும் பெரும் குடியேற்றங்களும் தவிர்க்கப்படும்  என தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

JAI HINDDec 1, 2022 - 04:25:33 PM | Posted IP 162.1*****

YOUR STATEMENT IS CORRECT....GOOD

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory