» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் தமிழக வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி: ஆளுநரிடம் பாஜக புகார்

செவ்வாய் 29, நவம்பர் 2022 12:31:39 PM (IST)



பிரதமர் வருகையின் போது தமிழக அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாக ஆளுநரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்துள்ளார். 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவ.29) சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளுநரைச் சந்தித்து பாஜக சார்பில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளோம். நமது பாரதப் பிரதமர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக ஜூலை 29-ம் தேதி 2022 அன்று தமிழகம் வந்திருந்தார். 

அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தனது பணியிலிருந்து தவறியிருக்கிறது, என்பதற்கான குற்றச்சாட்டை ஆதாரத்தின் அடிப்படையில் கொடுத்து வந்திருக்கிறோம். குறிப்பாக பிரதமர் வந்திருந்தபோது, நேரு உள்விளையாட்டரங்கில், 150 நாடுகளில் இருந்து வந்திருக்கக்கூடிய நிறைய நண்பர்கள் வந்திருந்தனர். அந்த சமயத்தில் அங்கு பிரதமரின் பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய உபகரணமான மெட்டல் டிடெக்டர்ஸ் அன்று சரியாக வேலை செய்யவில்லை. 

மெட்டல் டிடெக்டர்ஸ் எல்லாம் பழுதடைந்து, சரிவர பராமரிக்காமல், பெயரளவில் மட்டுமே காவல்துறையினர் அதை பல இடங்களில் வைத்திருந்தனர். பிரதமரின் வருகை நிகழ்வு முடிந்தபின்னர், மத்திய அரசின் ஏஜென்சிகள், மாநில அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், பிரதமர் வருகையின்போது மாநில அரசு போலீஸார் பயன்படுத்திய மெட்டல் டிடெக்டர்ஸ்கள் வேலை செய்யவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம். 

பாரதப் பிரதமர் வருகையின்போதே, பாதுகாப்பு பணிகளில் இவ்வளவு பெரிய குளறுபடிகளைச் செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள். உளவுத்துறை, இதற்கு காரணம் நீங்கள்தான் என்று குற்றம்சாட்டி சில காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதமும் நம் கைகளில் உள்ளது. எனவே தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்று யாரெல்லாம் இதில் தவறு செய்திருக்கிறார்களோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்கிறதா? என்பதை ஆய்வு செய்ய, ஒரு சுதந்திரமான தணிக்கை (Independent Audit) நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஒருபக்கம் கோவையில் தற்கொலைப்படைத் தாக்குதல், கள்ளக்குறிச்சி வன்முறை, 19 இடங்களில் பிஎஃப்ஐ தாக்குதல் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் நம்ம உள்துறை உறங்கிக்கொண்டிருக்கிறது.

மத்திய அரசின் கனவு திட்டம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம். தமிழகத்தில் மாநில அரசு மூலமாக மத்திய அரசு இதுவரை 69 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டத்தைக் கொடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கான நூறு சதவீதமான செலவை மத்திய அரசு மாநில அரசுக்கு கொடுக்கிறது. திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்டங்களில் இந்த திட்டத்தில் ஏகப்பட்ட முறைகேடுகள் இதில் நடந்துள்ளது. லஞ்சலாவண்யம் இதில் பெருகிவிட்டது. சில இடங்களில் குழாய்கள் மட்டுமே பதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதில் பல கோடி ரூபாய் அளவில் மாநில அரசு ஊழல் செய்துள்ளது. இந்த இரண்டு கோரிக்கைகளை ஆளுநரிடம் வலியுறுத்தி வந்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory