» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

வியாழன் 6, அக்டோபர் 2022 5:58:11 PM (IST)

மோசடி, போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு சட்டப் பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். பதிவுச்சட்ட விதிகளில் 22 ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும், இந்த பத்திரப் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும்.

அதற்காக பதில் பெறப்பட்டால், அதைக் கருத்தில்கொண்டு ஆவணப் பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத் துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியதாஸ் என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் "மத்திய சட்டத்திற்கு முரணாக இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தம் மத்திய சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும். பத்திரப் பதிவு ரத்து தொடர்பாக எந்த ஒரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. இது ஒரு முரண்பாடான சட்ட திருத்தம். மோசடி பத்திரம்தான் என்பதை முடிவு செய்ய எந்தவிதமான விதிமுறைகள், நடைமுறைகள் வகுக்கப்படவில்லை. 

இந்திய சாட்சியங்கள் சட்டத்தின் கீழ் உரிய சாட்சியங்கள் வேண்டும் இதற்கு சரியான அமைப்பு உரிமையியல் நீதிமன்றங்கள்தான். மேலும், பத்திரப் பதிவு ரத்துகளை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும். மாவட்டப் பதிவாளர்களுக்கே அதிகப்படியான அதிகாரம் இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், என்.மாலா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு குறித்து தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory