» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

வியாழன் 2, டிசம்பர் 2021 11:23:28 AM (IST)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக, நேர்மையாகவும் நடத்த, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்து உள்ளார். 

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்தநிலையில், 15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தக்கோரி அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஊரக உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி அ.தி.மு.க. சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த உயர்நீதிமன்றத்தில், வழக்கும் தொடரப்பட்டது. 

அதன் விளைவாக, அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை இந்த உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. அப்படியிருந்தும், பல்வேறு விதிமீறல்கள் நடந்தது.

தி.மு.க.வினரை வெற்றிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் நிர்பந்தம் செய்தனர்.இந்த விதிமீறல்களால் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி கவர்னரிடம். அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜனவரி 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே, ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாது என கருதி கடந்த மாதம் 1-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,

தேர்தல் நடவடிக்கைகள் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்க வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தினரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். 

தற்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க., 2006-ம் ஆண்டு ஆட்சியில் இருந்தபோது, உள்ளாட்சி தேர்தலின்போது, சென்னையில் மிகப்பெரிய வன்முறை நடைபெற்றது. எனவே, எங்களது கோரிக்கையை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory