» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது அமைச்சர்: பெ.கீதாஜீவன் பேட்டி!

செவ்வாய் 23, நவம்பர் 2021 3:11:58 PM (IST)



குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயக்கம் காட்டாது என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் 40 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை இன்று வழங்கினார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்பால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளின் குடும்ப சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் அக்குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தினை அறிவித்தார்கள். 

இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் சுமார் 74 குழந்தைகள் விண்ணப்பித்து இருந்தனர். தாய், தந்தையை கொரோனாவால் இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 70 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் ஆவார். இன்னும் பல இடங்களில் இத்திட்டத்தினை பற்றி அறியாதவர்கள் உள்ளனர். இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு வழிமுறைகளை எளிமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் ஆர்டிபிசிஆர் டெஸ்ட், சி.டி.ஸ்கேன் நகல், மருத்துவமனைகளில் சேர்ந்ததற்கான அறிக்கை ஆகியவை இருந்தால் நிவாரணம் பெறுவதற்கு போதுமானதாகும். மேலும் வறுமை கோட்டின் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து தகுதி உள்ள நபர்களா என கண்டறிந்து வறுமைக்கோட்டில் இணைக்கப்பட்டு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆதவற்ற நிலையில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு இருக்கும் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் காசோலையாக வழங்கப்படுகிறது. இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் அவரது வங்கி கணக்கில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு அவர்களுக்கு பராரிப்பு தொகையாக மாதம் ரூ.3000 வழங்க வேண்டும். பராமரிப்பதற்கு யாரும் இல்லையென்றால் அரசு இல்லங்களில் வைத்து பராமரிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசால் இத்திட்டத்தின் மூலம் சுமார் 6800 குழந்தைகளுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 20ம் தேதி குழந்தைகள் தினத்தன்று தமிழ்நாடு மாநில புதிய கொள்கை 2021ஐ தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக யாரும் பணி செய்யக்கூடாது. குழந்தைகளை பாலியல் சீண்டல், துன்புறுத்தல் உள்ளிட்டவைக்கு உள்ளாக்கப்படாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற வகையில் தமிழ்நாடு மாநில கொள்கை 2021ஐ வெளியிட்டுள்ளார். 

அத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் திட்டமிடுதல் நடைபெற்று வருகிறது. இந்த புதிய கொள்கை மீதான கருத்துக்களை தமிழக அரசு திறந்த மனதோடு வரவேற்கிறது. எனவே அனைத்து தரப்பினரும் புதிய கொள்கை மீதான கருத்துக்களை கூறலாம். குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்களை திறந்த மனதுடன் பெற்றோருடன் பேச வேண்டும். 

பெற்றோருடன் பேசுவதற்கு தயக்கம் இருப்பின் தமிழக அரசின் இலவச புகார் எண்ணான 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் பாலியல் தொடர்பான புகார் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு தயக்கம் காட்டாது என தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார், முக்கிய பிரமுகர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory