» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேலூர் துயரம்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்!

வெள்ளி 19, நவம்பர் 2021 5:08:18 PM (IST)

பேரணாம்பட்டு மசூதி தெருவில் சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மசூதி தெருவில் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த சுவர் விழுந்ததில் 4 குழந்தைகள், 5 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடங்கிய நாள் முதலே கடுமையாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை அனைத்துத் தரப்பினருக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இயல்பு வாழ்க்கை, கட்டமைப்பு சேதம், பயிர்கள் சேதம் உள்ளிட்ட ஏராளமான சேதங்களை வடகிழக்குப் பருவமழை ஏற்படுத்தியுள்ளது.

பருவமழை தொடங்கியது முதல் இதுவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே நிகழ்வில் குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்திருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அண்மைக் காலங்களில் இல்லாத வகையில் அதிக மழை குறைந்த கால அளவில் பெய்திருப்பதால் சுவர்கள் இயல்பாகவே வலுவிழந்திருக்கக் கூடும். அத்தகைய சூழலில் கூடுதலாக மழை பெய்தாலோ, காற்றடித்தாலோ சுவர் இடிந்து விழுந்து உயிர்களைக் குடிக்கும் வாய்ப்புள்ளது.

அதிக மழை பெய்த பகுதிகளில் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் வலுவிழந்த, பழமையான, முறையாகப் பராமரிக்கப்படாத வீடுகளில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.50,000 இழப்பீடும் போதுமானதல்ல. அது அவர்களின் இழப்பை ஈடு செய்யாது. எனவே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியுடன் உலகத்தரமான சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்." இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory