» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார நிபுணர் குழு அறிக்கை - முதலமைச்சர் பழனிசாமி நன்றி!!

திங்கள் 21, செப்டம்பர் 2020 5:02:36 PM (IST)ரங்கராஜன் தலைமையிலான பொருளாதார நிபுணர் குழு அறிக்கை இன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

கோவிட்-19 ஊரடங்கால், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவருமான டாக்டர் ரங்கராஜன் இன்று (21.09.2020), தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களிடம் சமர்ப்பித்தார். முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இந்த உயர்மட்டக் குழுவுடன் கலந்தாய்வு ஆலோசனை நடைபெற்றது. 

ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் க. சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், குழு உறுப்பினர்கள்: என். நாராயணன், டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சீனிவாசன், இந்தியன் வங்கியின் தலைமை செயல் அலுவலர் பத்மஜா சுந்துரு, Equitas வங்கியின் மேலாண்மை இயக்குநர் பி.என். வாசுதேவன், சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி. துரைசாமி, Madras Institue of Development Studies இயக்குநர் பேராசிரியர் பி.ஜி. பாபு, Madras School of Economics இயக்குநர் டாக்டர் கே. ஆர். சண்முகம், IIT-Madras பேராசிரியர் எம். சுரேஷ் பாபு ஆகியோர் பங்கேற்றிருந்தனர்..

கலந்தாய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆற்றிய உரை: துணை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், தமிழகம் பொருளாதார மேம்பாடு அடைவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் மரியாதைக்குரிய ரங்கராஜன் அவர்களுக்கும் மற்றும் குழுவில் இடம்பெற்றிருக்கின்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஆலோசனை நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கின்ற நிதித் துறை செயலாளருக்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் என் முதற்கண் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, விரைந்து, வேகமாக எல்லா துறைகளையும் அலசி ஆராய்ந்து கிட்டத்தட்ட 250 பக்கம் கொண்ட, என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக, தெளிவாக அரசுக்கு சமர்ப்பித்துள்ள மரியாதைக்குரிய குழுவின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் அரசின் சார்பாக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா ஒரு புதிய நோய். உலகமே அச்சத்தில் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், தமிழகம் வளர்ச்சிப் பாதையை அடைய வேண்டும், வளர்ச்சியை நோக்கிச் செல்ல எவ்வாறு கையாள வேண்டும் போன்ற விவரங்களை உள்ளடக்கி, சுருக்கமான கருத்துக்களை இங்கே தெரிவித்திருக்கின்றீர்கள்.

தமிழ்நாடு அரசு அவற்றை உரியமுறையில் பரிசீலித்து, தலைவர் அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்து தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கும், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கும் உங்களுடைய கருத்துக்களை எங்களுடைய அரசு கவனமாக எடுத்துக் கொள்ளும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, எங்களது வேண்டுகோளை ஏற்று, கொரோனா நோய்த் தொற்று இருக்கும் சோதனையான காலகட்டத்தில்கூட, அரசாங்கத்திற்கு உதவி செய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களது சொந்தப் பணிகளையெல்லாம் விட்டுவிட்டு, அரசுக்குத் துணை நின்ற மரியாதைக்குரிய இக்குழுவின் தலைவர் டாக்டர் சி.ரங்கராஜன் அவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை குழு கூட்டத்தில் உரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory