» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

வியாழன் 2, ஜூலை 2020 7:43:11 PM (IST)தந்தை-மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் இன்று இரவு தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில் கைது செய்யபட்டவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் பின்புறமுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இன்று காலை முதல் மாலை வரை  விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து உடல் தகுதி சோதனை நடைபெற்றது. பின்னர் அவர்களை தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து முதன்மை குற்றவியல் நீதிபதி ஹேமா முன்பு 3 போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர். 

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகிய 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி ஹேமா, மீண்டும் வரும் 16 ம் தேதி அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். பின்னர் 3 பேரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையொட்டி மத்தியபாகம் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், குற்றப்பிரிவு ஆய்வாளர் அம்பிகா, தலைமையில் நீதிமன்றம் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்திய அளவில் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் சாலையில் செல்வோரும் இதை பார்ப்பதற்காக வாகனத்தை நிறுத்தி காத்திருந்தனர். மேலும் பல்வேறு வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டவர்களை காண்பதற்காக கூடியதால் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.


மக்கள் கருத்து

BALACHANDRABOOPATHYJul 3, 2020 - 11:42:21 AM | Posted IP 173.2*****

law is a powerful supreme.

தமிழ்ச்செல்வன்Jul 3, 2020 - 09:50:47 AM | Posted IP 173.2*****

இப்போ மட்டும் பேரூரணி சிறையில் இடம் இருக்கிறது போலும்....

ஒருவன்Jul 2, 2020 - 08:17:37 PM | Posted IP 108.1*****

குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory