» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த அவகாசம்

வியாழன் 2, ஜூலை 2020 12:07:55 PM (IST)

சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர வெளிமாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் சி.ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘கரோனா ஊரடங்கினால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து, கடுமையான சிரமத்தில் உள்ளனர். எனவே, மின் கட்டணம் செலுத்த ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்து, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை பதில் அளிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ‘மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, மொத்தம் 1 கோடியே 35 லட்சத்து 13 ஆயிரத்து 545 நுகர்வோரில், 8 லட்சத்து 45 ஆயிரத்து 762 நுகர்வோர்கள் மட்டும், அதாவது சுமார் 6.25 சதவீதம் பேர் மட்டும், மின் கட்டணமாக ரூ.343.37 கோடி செலுத்தாமல் உள்ளனர்.

மற்ற அனைவரும் மின்கட்டணத்தை செலுத்தி விட்டனர். அதே போன்று மே மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தில் 12 லட்சத்து 94 ஆயிரத்து 904 பேர்(9.5 சதவீத்தினர்) மட்டுமே ரூ.287.94 கோடி செலுத்தவில்லை. ஜூன் மாதம் 18 லட்சத்து 44 ஆயிரத்து 128 பேர் (13.62 சதவீதத்தினர்) சுமார் ரூ.478.36 கோடி மின் கட்டணத்தை செலுத்தவில்லை. அதாவது சுமார் 85 சதவீதம் பேர் வழங்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தி விட்டனர். எனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் வருகிற 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு கால அவகாசம் வழங்க முடியாது‘ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘பொதுமக்களில் சுமார் 85 சதவீதம் பேர் மின் கட்டணத்தை செலுத்திவிட்ட நிலையில், யாருக்காக மனுதாரர் கால அவகாசம் கோருகிறார்‘ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியனிடம், ‘மின் கட்டணம் கால அவகாசம் தொடர்பாக விரிவான அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory