» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மீள்கிறது: ஆய்வில் தகவல்!!

புதன் 3, ஜூன் 2020 5:05:21 PM (IST)

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் அந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர துவங்கியுள்ளதாக எல்லாரா செக்யூரிட்டிஸ் இன்க் (Elara Securities Inc) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வு அறிக்கையின்படி கர்நாடகா, தமிழகம், பஞ்சாப், கேரளா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவதில் முன்னிலை வகிப்புதாக தெரியவந்துள்ளது. இது குறித்து  எல்லாரா செக்யூரிட்டிஸ் இன்க் நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர் கரீமா கபூர் கூறுகையில் : இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 27 சதவீத பங்களிப்பை அளிக்கும் கர்நாடகா, கேரளா, தமிழகம், பஞ்சாப், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முன்னிலை வகித்து வருகின்றன.

மின் பயன்பாடு, போக்குவரத்து இயக்கம், மொத்த விற்பனை மார்க்கெட்டுக்கு வந்த விவசாய பொருட்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெரும் தொழில் துறைகளை கொண்ட மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களில் இன்னும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. எனவே இந்த மாநிலங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பின்தங்கியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மின்சார தேவை, விவசாய தேவை ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியிலும் மின் தேவை அதிகரித்துள்ளது.

சலூன் சேவைகள், ஏர் கண்டிஷனர்கள், ஏர் டிராவல், பைக்குகள், வாக்கியூம் கிளீனர்கள் மற்றும் சலவை இயந்திரங்கள் ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது என்று ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. ஊரடங்கு முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது வைரஸ் குறித்த அச்சத்தால் மருந்தகம், மளிகைக் கடைகள் மற்றும் திரவ சோப்புகள் ஆகியவற்றுக்கான தேடல் அதிகரித்தது. ஆனால் தற்போது அந்த தேடல் தணிந்துள்ளது. ஆனால் எந்த சூழ்நிலையிலும்  இயர்போன்கள், தேங்காய் எண்ணெய், மடிக்கணினிகள், மொபைல் போன்கள், நகைகள், பொம்மைகள் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் போன்ற பொருட்களை மக்கள் தேடுவது சிறிதும் குறையவில்லை. இந்நிலையில் வைரஸ் தொடர்பான மாற்றங்கள் காரணமாக மக்கள் மத்தியில் இனிவரும் மாதங்களில் தேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கரீமா கபூர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory