» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கரோனா பாதிப்பு

சனி 30, மே 2020 11:35:00 AM (IST)

தமிழக மத்திய சிறைகளில் உள்ள 39 கைதிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சிறைகளில் நெருக்கடியைக் குறைக்க 7 ஆண்டுகள் மற்றும் அதற்கு கீழ் தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைதாகி சிறைகளில் உள்ளவர்களை உயர்மட்டக்குழு பரிந்துரையின்படி ஜாமீன் மற்றும் பரோல் மூலம் விடுவிக்க சுப்ரீம் கோர் பரிந்துரை செய்தது. அதன்படி தமிழக சிறைகளில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதே போல சிறைகளில் உள்ள சுமார் 15 ஆயிரம் கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு தடை விதித்து, வீடியோ கால் மூலம் பார்க்கும் வசதிக்காக 51 ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கப்பட்டன.

அதே போல, ஊரடங்கிற்கு பிறகு பதிவாகும் வழக்குகளில் புதிய கைதிகளை அடைக்க 37 மாவட்ட மற்றும் கிளை சிறைகள் தனி சிறைகளாக ஒதுக்கப்பட்டன. சென்னையைப் பொறுத்தவரை, புதிய கைதிகள் யாரும் புழல் சிறையில் அடைக்கப்படுவதில்லை எனவும், சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்படுவதாகவும் சிறைத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், புழல் சிறையில் 31 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை புழல் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகளும், மகளிர் சிறையில் 150-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். புழல் தண்டனை சிறையில் இருந்த கைதிகளில் 19 பேர் கடந்த 21-ந்தேதி தனி வேன் மூலம் கடலூர், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அங்கு 19 பேரை பரிசோதனை செய்தபோது 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அந்த 19 பேருடன் தொடர்பில் இருந்த புழல் சிறையில் உள்ள 98 கைதிகளுக்கு நேற்று முன்தினம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 31 பேருக்கு நேற்று கரோனா உறுதியானது. அனைவரும் புழல் சிறைக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர் மத்திய சிறையில் 4 கைதிகளுக்கும், மதுரை மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைகளில் தலா இரு கைதிகளுக்கும், திருச்சி சிறையில் உள்ள ஒரு கைதிக்கும் கரோனா நோய்த்தொற்று இருப்பதை சிறைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழக மத்திய சிறைகளில் மொத்தம் 200 கைதிகளுக்கு பரிசோதனை செய்து 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அறிகுறிகள் இருந்தால் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் சிறை மருத்துவமனையில் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, எழும்பூரில் உள்ள சிறைத்துறை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 54 வயதான அலுவலர் ஒருவர் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலைப் பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory