» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடன்கள், கட்டணங்கள், வரி செலுத்த ஜூன் 30 வரை அவகாசம்: முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு

செவ்வாய் 31, மார்ச் 2020 6:40:12 PM (IST)

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பயிர்க்கடன், சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றைச் செலுத்த 3 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்களை ஜூன் 30 ஆம்  தேதி வரை செலுத்தலாம் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அறிவிப்பொன்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு (30.6.2020 வரை) நீட்டிக்கப்படுகிறது. வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் கடன் பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் (30.6.2020 வரை) வழங்கப்படுகிறது.கரோனா நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும். மோட்டார் வாகனச் சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

எடைகளும், அளவைகளும் சட்டம், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3  மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில், வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு  கொண்டு வந்துள்ளனர். எனவே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், எந்தவிதமான வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory