» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரளாவில் சிக்கித்தவித்த 15 தமிழ் இளைஞர்கள் : மீட்க வைகோ எம்பி நடவடிக்கை.

செவ்வாய் 31, மார்ச் 2020 6:06:55 PM (IST)

கேரளாவில் சிக்கித்தவித்த 15 தமிழ் இளைஞர்களை மீட்க வைகோ எம்பி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியை சேர்ந்த 15 - கும் மேற்பட்ட இளைஞர்கள்  கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம்,  மோங்கத்து பகுதியில் கூலி வேலைக்கு சென்றுள்ளார்கள். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  ஊர் திரும்ப முடியாமலும் நான்கு நாட்கள் உணவில்லாமல் பட்டினியோடும் இருந்துள்ளார்கள்.

இந்நிலையில் தமிழக இளைஞர்கள் 15 பேர்களும் அவர்கள் தங்கியிருந்த மோங்கத்து என்ற இடத்திலிருந்து போக்குவரத்து வசதி இல்லாததால்  தங்கள் ஊரான திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதிக்கு நடந்தே செல்வது என்ற முடிவோடு அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு காலை 11 மணிக்கு மலப்புரம் பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

மலப்புரம் பகுதியில் கேரள போலீசார் அந்த  தமிழக இளைஞர்களை வழிமறித்து 144 தடை உத்தரவு உள்ள நிலையில் நீங்கள் நடந்து செல்லக்கூடாது. மீறினால் உங்கள் அனைவரையும் கைது  செய்வோம் என்று கூறி தடுத்து நிறுத்தியுள்னர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழக இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து உள்ளனர்.

இந்த செய்தியை  கேரள மாநிலத்தில் உள்ள ஜனம் என்ற தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர்.இந்த செய்தியை பார்த்த கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியில்  வசிக்கும் தமிழகத்தைச் சார்ந்த முத்துக்குமார் என்பவர் இந்த தகவலை தமிழகத்தில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பிக்கு அலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி. கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கள் மாநிலத்தைச் சார்ந்த 15 இளைஞர்கள் கேரள மாநிலத்தில் 144 தடை உத்தரவால் உணவு இல்லாமலும்,  பேருந்து வசதி இல்லாததால் ஊருக்கு வரமுடியாமல் , கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் சிக்கி தவிக்கிறார்கள்.அவர்களை கேரள போலீஸார் கைது செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே தாங்கள் உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு எங்கள் மாநில இளைஞர்களை மீட்டு பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் மலப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவரை தொடர்பு கொண்டு  மலப்புரம் பகுதி போலீஸாரிடம் சிக்கியுள்ள 15 தமிழ் இளைஞர்களையும் மீட்டு அவர்களுக்கு உணவு வழங்கி பத்திரமாக அவர்களை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி உடனடியாக  மலப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவுப்படி  அதிகாரிகள் 15 தமிழக இளைஞர்களையும் மீட்டு அவர்களுக்கு உணவு வழங்கியதோடு போக்குவரத்து வசதி செய்யும் வரை பாதுகாப்பாக தங்கவும் அதுவரை அவர்களுக்கு உணவு வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை  மேற்கொண்டனர். இந்த தகவலை  கேரளாவில் சிக்கித் தவித்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் எர்ணாகுளம் பகுதியில் வசிக்கும் தமிழர் முத்துக்குமார் மற்றும்  தங்களை உரிய நேரத்தில் தலையிட்டு மீட்ட  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி யிடம் அலைபேசி மூலம் அனைத்து சம்பவங்களையும் கூறியதோடு அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

இதையறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடனடியாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் கேரள மாநில எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் இந்த தகவலை உரிய நேரத்தில் தனக்கு தெரிவித்த எர்ணாகுளம் முத்துக்குமார் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory