» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வேண்டும்: பிரதமருக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம்

ஞாயிறு 29, மார்ச் 2020 8:43:45 AM (IST)

ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருப்ப தால் தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பால் ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கிப்போய் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வர்த்தகம் நடைபெறாததாலும், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதாலும், மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதாலும் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கரோனா பரவுவதை தடுக்க தேசிய ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு தொடர்ந்து கண்டிப்புடன் அமல்படுத்தி வருகிறது. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர்களை கண்காணித்தல், பரிசோதனை செய்தல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு அது சமூக தொற்றாக மாறிவிடாதபடி அரசு செயல்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தேவையானவை வினியோகிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் நிவாரண உதவிகளை அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், இந்திய பொருளாதாரத்துக்கு உதவிகரமாக இருக்கும். ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக அமல்படுத்தும் அதே நேரத்தில் ஏழை, எளியவர்களுக்கான நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதும் அவசியமாகிறது. இதற்காக பிரதமரின் ‘கரிப் கல்யாண் யோஜனா’ திட்டத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மேலும் சில நிவாரண உதவிகள், எதிர்வரும் நாட்களில் தேவைப்படுகின்றன. சுகாதாரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங் கள் ஆகியவற்றுக்கு அதிக நிதி தேவைப்படக்கூடும். பல்வேறு பிரிவினருக்கும் அவர்களின் தொழில் வளர்ச்சியை மீண்டும் எட்ட உதவி செய்வதோடு, பொருளாதார மேம்பாட்டை புதுப்பிக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது உள்ளது. வரி குறைப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றில் எல்லா அரசுகளுமே பாதிக்கப்படும்.

கொஞ்ச காலத்துக்குள் வருவாயை உயர்த்திக் கொள்ள முடியாது. மேலும் ஏற்படக்கூடிய செலவினங்கள், பொறுப்புகள் ஆகியவை காத்திருக்காது. எனவேதான் 2019-20 மற்றும் 2020-21-ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. யில் சில விதிவிலக்கை கேட்டு 25-ந் தேதி கடிதம் எழுதி இருந்தேன். அது, மாநிலத்தின் கூடுதல் செலவை எதிர்கொள்ள உதவும். இந்திய நிதி பரிவர்த்தனை முறைகளின்படி, ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு மட்டுமே கடன் பெற்றுக்கொள்ள வழிவகை உள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவினால் பொருளாதாரத்தில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான தாக்கம் இருக்கும்.

இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்காக வழக்கத்தில் இல்லாத முறையை பின்பற்ற வேண்டியது உள்ளது. வழக்கமாக உள்ள பொருளாதார கொள்கை, கோட்பாடுகளையெல்லாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்து உள்ளது.

எனவே இந்த சூழ்நிலையில் மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெறுவதை அனுமதிப்பதோடு, மாநில அரசுகளுக்கு சிறப்பு மானியமாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் கோடி ரூபாயை அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) மாநில அரசு அளித்துள்ள பங்களிப்புக்கு ஏற்ற விகிதத்தில் மாநில அரசுகளுக்கு நிதிப்பகிர்வை வழங்கலாம். அந்த வகையில் தமிழகத்துக்கு சிறப்பு பங்களிப்பு நிதியாக ரூ.9 ஆயிரம் கோடியை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற இக்கட்டான மற்றும் சவாலான சூழ்நிலையில், தேசநலனுக்காக தைரியமான, கடினமான, வழக்கத்துக்கு மாறான முடிவுகளை எடுப்பதோடு, எங்களின் சிறப்பான கோரிக்கையை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory