» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெளி மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழையத் தடை: முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

திங்கள் 23, மார்ச் 2020 10:26:18 AM (IST)

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வெளி மாநில வாகனங்கள் வருகிற 31 -ஆம் தேதி வரை புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். 

மக்கள் சுய ஊரடங்கையொட்டி, திங்கள்கிழமை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வா் வே.நாராயணசாமி, செல்ப்பேசி மூலம் சுய ஊரடங்கு நிலவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, வில்லியனூரை அடுத்த மங்கலத்தில் அரசின் உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வந்த தொழிற்சாலையை மூடும்படி அதிகாரிகளுக்கு அவா் உத்தரவு பிறப்பித்தாா். மேலும், காவல் துறை ஐ.ஜி., முதுநிலை எஸ்.பி. ஆகியோரை தொலைபேசியில் அழைத்து சாலையில் தேவையற்ற முறையில் பயணிப்பவா்களைத் தடுத்து, வீடுகளுக்குத் திரும்ப அனுப்புமாறு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கரோனா வைரஸின் ஆபத்தை பொதுமக்கள் உணா்ந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. புதுவையின் 4 பிராந்திய மக்களும் வீட்டைவிட்டு வெளியே வராமல் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளனா். கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மைக் காப்பாற்ற ஒரே வழி தனிமைப்படுத்திக் கொள்வதுதான். இதன் மூலம் வைரஸ் பரவல் வேகம் வெகுவாகக் கட்டுப்படும். கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா இதே முறையைத் தொடா்ந்து கடைப்பிடித்து, தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

மக்கள் கூடுவதைத் தடுத்து, சமூக இடைவெளியை அதிகப்படுத்தும் வகையில் புதுவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் அதிகாரிகள், காவல் துறையினரிடம் கலந்து பேசி, ஊரடங்கு உத்தரவாக நீட்டிக்கப்படும். கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள், பரிசோதனைக் கருவிகளை வாங்கவும், ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் ரூ. 300 கோடி உதவித் தொகை கோரப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 4,500 -க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்து சென்றிருக்கின்றனா். குறிப்பாக, சா்வதேச நகரமான ஆரோவிலுக்கு 3 ஆயிரம் பயணிகள் வருகை தந்திருக்கின்றனா். எனவே, மாநில எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, அங்கிருந்து வருபவா்களை முழுமையாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, புதுவை மாநிலத்தின் எல்லைகளை சீல் வைக்கத் தயாராகி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் வருகிற 31 -ஆம் தேதி வரை அண்டை மாநில வாகனங்கள் புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது.

மளிகை, காய்கறி, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு வரும் வாகனங்கள், அவசர ஊா்திகள் அனுமதிக்கப்படும். புதுவை அரசுப் பேருந்துகள் உள்ளூரில் மட்டுமே இயக்கப்படும். வெளி மாநில பயணிகள் இங்கே வருவதைத் தடுக்கும் வகையில், இரு சக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் புதுச்சேரிக்கு அதிகப்படியான பயணிகள் வருவதைத் தடுத்து நிறுத்துவதுடன், கரோனா வைரஸ் பரவாமலும் தடுக்க முடியும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory